மக்களின் வாக்குகளை மட்டுமே பெற்று வெற்றி பெற வேண்டும் என்றால் அது நிச்சயம் நடக்காது என்பது பாஜகவிற்கு தெரியாமல் இல்லை.அப்பட்டமான அயோக்கிய அரசியல் செய்யும் பாஜக, வெற்றி பெறுவதற்கான அனைத்து வழிகளையும் தனக்குச் சாதகமாக ஆக்கிக் கொண்டு இருக்கின்றது.
இஸ்லாமிய கட்சிகளும் இந்தத் தேர்தலில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் அவர்களின் நடவடிக்கைகள் காலச்சூழலுக்கு ஏற்ப முடிவுகளை எடுக்க தெரியவில்லையோ என்று எண்ணத்தோன்றுகிறது.
தனது கட்சி யாரை ஆதரித்ததாக அறிவிக்கின்றதோ, அவர்களுக்காக கண்மூடித்தனமாக பரப்புரை ஆற்றுவதற்கு கட்சித் தொண்டர்களும் தயாராகி இருப்பது வேதனை அளிக்கக் கூடிய ஒன்று.
அப்படிப்பட்ட தொண்டர்களில் பலர் தங்கள் கட்சித் தலைமையின் முடிவை நியாயப்படுத்த தமது சொந்த சமூக மக்களை முனாஃபிக்குகளாகக் கூட காட்ட முற்படுகிறார்கள். இது எந்த வகையில் நியாயம் என்பதை அவர்கள் தான் சொல்ல வேண்டும்.
ஒரு சிலரோ இவர்களுக்கும் ஒரு வாய்ப்பை கொடுப்போம் என்று சொல்லி சிலரை ஆதரிக்கிறார்கள். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலைகளை இவர்கள் விளங்கிக் கொள்ளவில்லை, அல்லது புரியாதது போல் இருக்கிறார்கள் என்பதை இவர்களின் வார்த்தைகளாலேயே புரிந்து கொள்ள முடிகிறது.
அப்படியானால் யாரை ஆதரிப்பது சாலச்சிறந்தது? நம் எதிர்கால சந்ததிகள் வாழ யாரை ஆதரிப்பது தமிழக மக்களுக்கு சிறந்தது? யாரை ஆதரிப்பது நாட்டின் பாதுக்காப்பிற்கும் இறையாண்மைக்கும் நன்மை பயக்கும்…
இது வாய்ப்பு கொடுக்கும் தருணம் அல்ல, இதுதான் நமக்கான இறுதி வாய்ப்பு என்பதை எப்படி இவர்களுக்குப் புரிய வைப்பது. பாஜக பூச்சாண்டி எங்களிடம் காட்டாதே என்று வீர வசனம் பேசக் கூடியவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். பாஜகவை காட்டி யாரும் பயமுறுத்தவில்லை. அவர்களுக்கு பயப்பட சொல்லவும் இல்லை. ஆனால் அவர்களின் உள்ளடி வேலைகளாலும், ஓட்டு சிதரலாலும் மீண்டும் வெற்றி பெற்றார்கள் என்றால் முடிந்ததுதான் நம்முடைய கடைசி வாய்ப்பாக இருக்கும். அதாவது இதுதான் கடைசி தேர்தலாக இருக்கும். இதை ஏதோ போற போக்கில் சொல்லிச்செல்லும் வார்த்தைகளாக கடந்து செல்ல வேண்டாம்.
மாறாக, பாசிச பாஜகவினர் தங்களது பிரதிநிதித்துவத்தை அனைத்துத் துறைகளிலும் ஏற்படுத்தி வைத்திருக்கக் கூடியது யாரும் மறுக்க முடியாது.
2022க்குள் இந்த நாட்டில் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களை அடியோடு அழித்து விடுவோம் என்று பல்வேறு இடங்களிலும் கூட அவர்கள் நேரடியாகவே அறிவித்திருக்கிறார்கள்.
அதுபோல பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் நீதிமன்றங்களும், தேர்தல் ஆணையமும் இனி இருக்காது என்று இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் அவர்கள் தனது பேட்டியில் குறிப்பிடுகிறார்.
பல்வேறு தேர்தல்களில் வாக்குப் பெட்டியில் முறைகேடு செய்யப்பட்டும் கூட தேர்தல் ஆணையம் அதையெல்லாம் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. இதே நிலை இந்தப் பொதுத் தேர்தலிலும் நடக்கும் என்பதில் நமக்கு ஐயமில்லை.
மேலும் வாக்குப்பதிவின் போது தோல்வி அடையக் கூடிய நிலை இருந்தாலும் கூட அதையும் வெற்றி பெற்றதாக அறிவிக்கக் கூடிய அளவுக்கு போதிய அதிகாரிகளை நியமித்து வைத்திருக்கிறார்கள்.
தற்போதைய தமிழக அரசியல் சூழலில் தினகரன், கமல், சீமான் என்று யாரையுமே நம்ப முடியாத ஒரு நிலை உண்டு. இப்படிப்பட்ட இக்கட்டான சூழலில் நாம் அறிந்த வகையில் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக செல்லமாட்டார்கள் என்று நம்பக் கூடியவர்கள் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கக்கூடிய காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள், முஸ்லிம் லீக்.
திமுக கூட்டணியில் 20 இடங்களில் இந்தக் கட்சிகேளே போட்டியிடுகின்றன. மீதம் இருக்கக்கூடிய 20 தொகுதிகளில் தான் திமுக போட்டியிடுகிறது. எனவே திமுக கூட்டணியை சேர்ந்த கட்சிகள் களம் காணும் 20 இடங்களில் தாராளமாக அவர்களுக்கு வாக்களிக்கலாம்
மேலும் இன்று தினகரன் அணியில் இருக்கக்கூடிய SDPI கட்சி திமுகவில் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தால் நிச்சயம் அந்தக் கூட்டணியில் தான் போட்டியிட்டு இருப்பார்கள். வாய்ப்பு கிடைக்காது என்ற காரணத்தால் ஓரளவிற்கு பாஜகவை எதிர்க்கக்கூடிய தினகரனின் கட்சியை ஆதரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அது அவர்களின் கட்சியின் நிர்பந்தம் என்பதை நாம் புரிந்து கொள்ளவும் முடிகிறது.
ஆகவே இந்தக் காலச் சூழ்நிலையை உணர்ந்து எதிர்கால நம்முடைய சமூகம் தழைத்தோங்க வேண்டும் என்றால், ஒட்டுமொத்த இந்திய மக்களின் எதிர்காலம் சிறப்படைய வேண்டும் என்றால், திமுக கூட்டணியை ஆதரிப்பதே சாலச்சிறந்தது.
அன்புடன்
முத்துப்பேட்டை அலீம்