தர்மம் தலைகாக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும் என்ற பழமொழிக்கேற்ப இஸ்லாமிய சமூகம் இந்நாட்டில் எங்கு அசம்பாவிதங்கள் நடந்தாலும் இயற்கை சீற்றங்கள் நடந்தாலும் அங்கெல்லாம் தங்களது பொருளாதாரத்தை எல்லாம் அள்ளி அள்ளிக் கொடுப்பதைப் பார்த்திருப்போம்.
ஆனால் இன்று கொரோனா வைரஸ் நோய் காரணமாக அநியாயமாகப் பழி சுமத்தப்பட்ட இஸ்லாமிய சமூகம், தங்களால் உதவப்பட்டவர்களாலேயே மிகப்பெரும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது.
மற்றவர்களுக்கு ஒரு இன்னல் என்றால் அவ்விடத்தில் நம்முடைய பங்களிப்பு இருக்க வேண்டும் என்று நினைத்த இஸ்லாமியர்களுக்கு இன்று அவர்களின் நெருக்கடிக்கு எப்படிப்பட்ட நிவாரணத்தை உதவி பெற்ற மக்கள் வழங்குகிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
பச்சிளம் குழந்தைகளுக்கு பசும்பால் கொடுப்பதற்கு கூட முன்வர மறுக்கக்கூடிய மக்களுக்குத்தான் நாம் வாரி வாரி இறைத்தோம்.
தற்போதும் கூட இவ்வளவு இன்னல்களுக்கு மத்தியில் நமது இஸ்லாமிய இயக்க சகோதரர்கள், தனிப்பட்ட நபர்கள் என அனைவரும் லாக் டவுன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை செய்து வருகின்றார்கள். இது சரியா தவறா என்ற கோணத்தில் நாம் இங்கே பேசப்போவதில்லை. ஆனால் சொந்த சமூகத்தில் எத்தனை மக்களுக்கு உங்கள் நிவாரண உதவிகள் சென்றடைந்து இருக்கிறது என்பதை சிந்தித்துப் பாருங்கள்.
உங்கள் பொருளாதாரத்தை என்னதான் நீங்கள் வாரி இறைத்த போதும் உங்களை அவர்கள் எவ்வாறு அணுகுகிறார்கள் என்பதை எண்ணிப்பாருங்கள். இனியாவது இந்த சமூகம் திருந்த வேண்டும்.
உதவி செய்வது என்பது நமக்குப் பிறகு தான் மற்றவர்களுக்கு. இங்கே நாமே உதவி தேவை உடையவர்களாக இருக்கின்றபோது நாம் எதற்காக மற்றவர்களுக்கு உதவி செய்து கொண்டிருக்க வேண்டும். நமக்கு போக மீதம் இருந்தால் நிச்சயம் நாம் செய்யலாம். அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் நமக்கே மிகப் பெரிய உதவிகள் தேவை இருக்கிறது.
அதையும் தாண்டி நம்முடைய பொருளாதாரத்தை நம் சமூகத்தின் வளர்ச்சிக்காக சமூக மக்களின் வாழ்வாதாரத்திற்காக செலவு செய்வது தான் எதிர்கால இஸ்லாமியர்களின் சீரான வாழ்விற்கு வழிவகுக்கும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
இல்லை நாங்கள் இப்படித்தான் நடந்து கொள்வோம் எங்களுக்கு எங்கள் சமூக மக்கள் முக்கியமல்ல மாற்றுமத நண்பர்களின் பாராட்டுதல்களும் அவர்களின் அன்பு மட்டும் போதும் என்ற நிலையில் இருந்தால் அந்தப் பாராட்டுதலும், அன்பும் நமக்கு எவ்விதத்திலும் எந்த கால சூழ்நிலையிலும் உதவிட முடியாது என்பதை மறந்துவிடக் கூடாது.
மேலும் நமது மார்க்க வழிகாட்டுதலே உங்களுடைய சொந்தங்களில் இருந்து உங்கள் தர்மத்தை தொடங்குங்கள் என்பதுதான்.
இனியும் நாம் திருந்த மறுத்தால் எதிர்கால இஸ்லாமிய சமூகம் நம்மை காரி உமிழ்வது நிச்சயம்.
அன்புடன்
முத்துப்பேட்டை அலீம்