காவல்துறைக்கு ஓர் வேண்டுகோள்..!

காவல்துறை என்ற ஒரு துறை ஒவ்வொரு நாட்டுக்கும் இன்றியமையாத துறைகளில் ஒன்று.

நாட்டின் அரசு காவல்துறைக்கு அந்நட்டின் சட்ட திட்டங்களுக்கு எதிராக செயல்படக்கூடியவர்களின் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கான உரிமைகளை வழங்குகின்றது.

சட்டங்கள் நாட்டுக்கு நாடு மாறுபடும் ஆனால் காவல்துறை சட்டங்கள் என்பது பெரும்பாலும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். ஒரு சில மாறுபாடுகள் இருக்கலாம்.

சில நாடுகளில் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் காவல்துறை வரும், நமது நாட்டில் மாநில அரசின் கட்டுப்பாட்டிலும், ஒரு சில மாநிலங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலும் இருக்கின்றது.

நமது நாட்டுக்குள்ளேயே அந்தந்த மாநிலத்திற்கு தகுந்தார் போல பல்வேறு சட்ட நடைமுறைகள் அந்தந்த மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

என்னதான் சட்டத்தை காக்கும் பணியை மேற்கொண்டாலும் காவல்துறைக்கும் சில கட்டுப்பாடுகள் உண்டு. அவற்றை மீறுவதும் சட்டத்தை மீறுவது தான்.

தற்போது கையடைவு (custody) மரணம் என்பது சர்வசாதாரணமாக ஆகியிருக்கிறது. குற்றம் செய்ததாக கருதப்படுபவர் கைது செய்யப்பட்டால் 24 மணி நேரத்திற்கு மேல் காவல்நிலையத்தில் வைக்கக்கூடாது என்று சிஆர்பிசி செக்சன் 57 சொல்கிறது.

அப்படி வைப்பது மனித உரிமை மீறல் என்பதாக குறிப்பிடுகிறது. மேலும் அது அடிப்படை உரிமைக்கு எதிரானது என இந்திய அரசியலமைப்புச் சட்டம் சரத்து 22 தெளிவுபடுத்துகிறது. அப்படி ஒருவர் கைது செய்யப்பட்டு 24 மணி நேரத்திற்கு மேலாக காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருக்கிறார் என்றால் அது சட்டத்திற்குப் புறம்பாக அடைக்கப்படுதல் (இல்லீகல் கஸ்டடி) என்று அழைக்கப்படுகிறது.

அப்படி அடைக்கப்பட்டவரின் உறவினர்கள் நீதித்துறையை நாடினால் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆணையாளர் ஒருவரை நியமித்து காவல்நிலையத்தில் அடைக்கப்பட்ட நபரை தேடுவதற்கு அல்லது காவல் நிலையத்தை சோதனை செய்வதற்கு உத்தரவிடலாம் என்பதாக குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 97 சொல்கிறது.

அந்த 24 மணி நேரம் என்பதும் வழக்கு சம்பந்தமாக விசாரணை செய்வதற்காக தானே தவிர அடித்து சித்திரவதை செய்து படுகொலை செய்வதற்கு அல்ல.

பல சந்தர்ப்பங்களில் விசாரணை என்கிற பெயரில் குற்றம் இழைத்ததாக கருதப்படக் கூடியவர்களை கொடூரமான கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டு செய்யாத தவறை கூட ஒத்துக் கொள்ளச் செய்ய செய்து சிறையில் அடைக்கக் கூடிய நிகழ்வுகளையும் அன்றாடம் பார்க்கிறோம்.

நேற்றைய தினம் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த ஜெயராஜ் பென்னிக்ஸ் என்ற தந்தை மகன் இருவர் காவல்துறையால் அடித்தே கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

உங்களுக்கு அவர்களை அடித்துக் கொள்வதற்கு யார் அனுமதி கொடுத்தது.

குற்றம் செய்திருந்தால் அவர்கள் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்து இருக்கவேண்டும்.

இது முதல் முறை நடந்த சம்பவம் அல்ல மாறாக இது போல பல சம்பவங்களை தமிழகத்தில் நாம் பார்த்து வருகின்றோம். காவல்துறை உங்கள் நண்பன் என்று சொல்லிக்கொள்ளும் காவல்துறை உண்மையில் நண்பர்களாக இருக்கிறார்களா என்பதுதான் கேள்வியே?

காவல்துறையிலும் நல்லவர்கள் இருக்கிறார்கள் என்று சொல்வார்கள் உண்மைதான் மறுக்கவில்லை ஆனால் அந்த வார்த்தையின் அர்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும்.

காவல்துறையிலும் நல்லவர்கள் இருக்கிறார்கள் என்றால் அந்த காவல்துறை எந்த அளவுக்கு மக்களால் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

காவல்துறைக்கு எங்கள் அன்பான வேண்டுகோள் நீங்களும் மனிதர்கள் தான் அது போல நாங்களும் மனிதர்கள்தான் உங்களுக்கு உள்ள உணர்வுகள் எல்லாம் எங்களுக்கும் உண்டு. காக்கி சட்டையை போட்டு விட்டால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற போக்கு சரியானதல்ல.

அதற்கென்று ஒரு கண்ணியம் உண்டு அதை காப்பதற்கு நீங்கள் முன்வர வேண்டும்.

அதுபோல காவல் நிலையம் அழைத்துச் செல்லக் கூடியவர்கள் இடத்தில் அந்த காவல்துறையை சேர்ந்தவர்கள் நடந்து கொள்ளக்கூடிய விதம் என்பதும் மிக மோசமானது வயதுக்கு கூட மரியாதை கொடுக்காமல் வாயில் வந்த வார்த்தைகளை பேசக்கூடிய காவலர்களையும் பார்க்கின்றோம்.

சட்டத்தைக் காக்கும் பணியில் உள்ள காவல்துறை சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளில் இறங்கியிருப்பது மிகப்பெரும் கேட்டை தான் நாட்டிற்கு கொடுக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

காவல்துறை மீது கண்ணியமும் பயமும் மக்களுக்கு இருக்கும் வரை தான் சட்டம் சட்டமாக இருக்கும்.

உங்கள் மீது உள்ள அந்த கண்ணியத்தை அந்த பயத்தை உங்களின் கீழான செயல்களால் நீங்கள் போக்கி விடாதீர்கள்.

மக்களை கொடூர மிருகங்களாக பார்க்காதீர்கள். மக்களை மனிதர்களாக பாருங்கள். மக்களும் உங்களை மாமனிதர்களாக பார்ப்பார்கள்.

கொரோனா காலத்திய உங்கள் சிறப்பான பல்வேறு சமூகப் பணிகள் ஒரு சில காவல்துறை அதிகாரிகளால் இதுபோல சீரழிந்து விடக்கூடாது என்றால் கவனத்தோடும் கண்ணியத்தோடும் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி

About வலையுகம் அலீம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *