இன்று தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்து கொண்டுள்ள திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் முஸ்லிம்களுக்கும் பிரத்தியேகமாக தேர்தல் நேரத்தில் பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் தேர்தலில் வாக்களிக்கும் தினம் வரை 3 மாதங்கள் நம்மை பற்றி சிலாகித்து பேசுவதும், கவர்ச்சியான வாக்குறுதிகளை அள்ளி வழங்குவதும் அதனை கேட்டு நம் சமுதாய கட்சிகளும் அவர்களுக்காக பல்வேறு தியாகங்களை செய்வதும் வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. தேர்தல் முடிந்த அன்றைய தினத்திலிருந்தே அவர்களின் கபட நாடகமும் முடிவுக்கு வந்து விடுகின்றது.
தேர்தல் பரப்புரையின் போது கொடுத்த வாக்குறுதிகள் காற்றோடு கரைந்த கீதங்களாக கரைந்து விடுவதும், நம் சமூகத்தின் வாழ்க்கை தரம் கேள்விக்குறியாவதும் தொன்று தொட்டு நடந்து வரும் வழக்கமாகிவிட்டது. சமுதாய அமைப்புகளும், கட்சிகளும் 5 ஆண்டுக்கு ஒருமுறை நம் சமுதாயத்தை பாஜகவை காட்டி பயமுறுத்தி இந்த இரு கட்சிகளிடமும் அடகு வைக்கும் வேலையை அறிந்தோ அறியாமலோ செய்து வருகின்றனர். சமுதாய மக்களும் ஒன்றும் அறியாமல் இவர்கள் கை காட்டும் நபர்களுக்கு வாக்களித்தும் வருகின்றனர்.
வாக்களித்த மறுதினமே தமிழக மக்களின் நிலை மீண்டும் கேள்விக்குறியாவதை யாரும் மறுக்க முடியுமா?
வாக்குகளை பெற்று ஆட்சிப்பொருப்பில் அமரும் அதிமுக அல்லது திமுக தங்கள் கட்சி தலைவர்களின் நலனுக்கு பாடுபடும் வேலையை கன கச்சிதமாக ஆரம்பித்துவிடுகின்றனர். இவர்களின் வாக்குறுதிகளை கேட்டு ஓட்டு போட்ட மக்களுக்கு வேட்டு வைக்கும் வேலையை துவங்கிவிடுகின்றனர்.
சமுதாயமே…
உங்கள் வரிப்பணத்தை கொள்ளையடிக்க 5 ஆண்டுகாலம் குத்தகைக்கு விடும் வேலையை செய்யப் போகின்றீர்களா?
ஆட்சி மாற்றம் என்ற பெயரில் எடுக்கும் முடிவு சரியானதல்ல. கட்சி மாற்றமே சிறந்தது.
டெல்லியில் சாத்தியம் என்றால் தமிழகத்தில் சாத்தியமில்லையா? தமிழ் சமூகம் ஒன்றினைந்து நின்றால் இந்த திருடர்களை ஒழித்து கட்டிவிட முடியும். இன்று தேர்தல் களத்தில் யோக்கியமான கட்சியும், கூட்டணியும் இருப்பதாக தெரியவில்லை என்பதற்காக இரு திருடர்களில் கொஞ்சம் நல்ல திருடனுக்கு வாக்களிக்கலாம் என நினைப்பது முட்டாள் தனம்.
தனது வீட்டை கட்டி எழுப்ப பல்வேறு திட்டமிடும் என் தமிழ் சமூகம் நாட்டை கட்டி எழுப்ப எவ்வித திட்டமிடலும் இன்றி திருடர்களிடம் குத்தகை விடுவது நியாயமா? அதற்கு துணை போவது நியாயமா?
(ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள், ‘உன் சகோதரன் அக்கிரமக்காரனாக இருக்கும் நிலையிலும் அக்கிரமத்துக்குள்ளானவனாக இருக்கும் நிலையிலும் அவனுக்கு உதவி செய்” என்று கூறினார்கள். மக்கள், ‘இறைத்தூதர் அவர்களே! அக்கிரமத்துக்குள்ளானவனுக்கு நாங்கள் உதவுவோம். அக்கிரமக்காரனுக்கு நாங்கள் எப்படி உதவுவோம்? என்று கேட்டனர். நபி(ஸல்) அவர்கள், ‘அவனுடைய கைகளைப் பிடித்து (அக்கிரமம் செய்யவிடாமல் தடுத்து)க் கொள்வாய் (இதுவே, நீ அவனுக்குச் செய்யும் உதவி)” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ்(ரலி) அவர்கள்
நூல் : புஹாரி (2444)
மேற் சொல்லப்பட்ட நபிமொழியின் படி அக்கிரமக்காரர்களின் கைகளை தடுப்பதும் நமது கடமையே.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைநம்பிக்கையாளர் ஒரே புற்றில் இரண்டு முறை தீண்டப்படமாட்டார்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) அவர்கள்
நூல் : புஹாரி (6133), முஸ்லிம் (5725)
மேற்சொல்லப்பட்ட நபிமொழியை நாம் அனைவரும் அறிந்தும் அதனை அறியாதது போல் மீண்டும் மீண்டும் குட்டுப்பட்டு வருவது சரியா?
சிந்திக்க வேண்டுகிறேன்…
இன்று தமிழகத்தில் புதிய மாற்றுக்கட்சி தேவை உள்ளது. அது நம் தமிழ் மக்களின் உணர்வாக இருப்பது சிறந்தது.
அன்புடன்
முத்துப்பேட்டை அலீம்