கண்ணியத்திற்குரிய சமுதாய சொந்தங்களே நம் அனைவரின் மீதும் இறைவனின் அமைதியும் சமாதானமும் உண்டாகட்டுமாக
இந்த பதிவு பொதுச் சமூகத்திற்கும் காவல்துறைக்கும்
வலியும் வேதனையும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்பார்கள்.
பல ஆண்டுகளாக இஸ்லாமிய சமூகம் இந்த காவல்துறையின் அராஜகத்தால் பட்ட துன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. பல ஆண்டுகளாக ஒரு சமூகமே காவல்துறையின் அநீதிக்கு எதிராக தனியாக போராடி வருகிறது.
எத்தனை பொய் வழக்குகள், எத்தனை லாக்கப் மரணங்கள், எத்தனை சிறை மரணங்கள் இன்றளவும் குற்றம் நிரூபிக்கப்படாத விசாரணைக் கைதிகளாகவே தங்கள் இளமையை இழந்தும், பொருளாதாரத்தை இழந்தும் 10 ஆண்டுகளை கடந்தும் சிறைக் கொட்டடிகளில் போதிய ஊட்டச்சத்தும் சுகாதாரமும் மருத்துவமும் இன்றி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக ஒருவர் பின் ஒருவராக மரணிக்கக் கூடிய அப்பாவி முஸ்லிம் சிறைவாசிகளின் நிலையையும் பார்த்து வருகிறோம்.
தாய் தந்தை உற்றார் உறவினர் என்று பலரின் மரணச் செய்தியை மட்டும் கேட்டுக்கொண்டும், அண்ணன் தம்பி அக்கா தங்கை உற்றார் உறவினர்களின் மன நிகழ்வுகளை காதால் கேட்டுக் கொண்டும் தங்களின் வாழ்க்கையை ஆறடி சுவருக்குள் அடக்கிக் கொண்டிருக்கிறார்களே அவர்களைப் பற்றி என்றாவது இந்த பொதுச் சமூகம் சிந்தித்ததுண்டா?
ஒரு சிலர் விதிவிலக்காக இருக்கலாம். ஆனால் ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் மௌனம் காத்தது ஏனோ தெரியவில்லை
ஊடகங்களின் ஓரவஞ்சனையில் ஒரு சமூகமே சிக்கி சீரழிக்கப்பட்டதே. எங்கே சென்றது என் தமிழ்ச்சமூகம்?
இதுமட்டுமல்லாமல் காவிகள் நடத்தும் கலவரங்களில் ஒருதலைப்பட்சமான நடவடிக்கை எடுத்து முஸ்லிம்களை மட்டுமே கொத்துக் கொத்தாக கைது செய்து சித்திரவதை செய்த எத்தனையோ நிகழ்வுகளை பட்டியலிட முடியும். குறிப்பாக முத்துப்பேட்டை இளைஞர்கள் எத்தனை பேருடைய வாழ்க்கையை சீரழித்து இருக்கிறார்கள் இந்த காவல்துறை. அது போல பல ஊர்களிலும் இதே நிலை தொடர்ந்து இருக்கிறது.
தமிழகம் முழுவதுமான ஒரு விரிவான, முழுமையான விசாரணை நடத்தினால் நிச்சயம் தெரியவரும்.
சாத்தான்குளம் சம்பவம் தமிழ் சமூகத்தை நியாயத்தை நோக்கித் தூண்டி இருக்கிறது என்பதை நினைத்து, இப்போதாவது உணர்ந்து கொண்டதே என் தமிழ் சமூகம் என்று எண்ணி மகிழ்ச்சியாகத் தான் இருக்கிறது.
அன்பினால் ஆற்ற முடியாத பணிகள் உண்டா? என்பார்கள் அது காவல் பணி ஆனாலும் நிச்சயம் முடியும்.
அன்பினாலும், ஆதரவினாலும், மனோதத்துவ முறையிலும் விசாரித்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய காவல்துறை, தனது அதிகாரத்தாலும், ஆணவத்தாலும் எந்த ஒன்றையும் சாதித்துவிட முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
வள்ளுவனின் குறளை படித்து பணிக்கு வந்த காவலர்கள் அவற்றையெல்லாம் மறந்து வாழக்கூடிய நிலையைத்தான் பார்க்கின்றோம்.
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.
என்றான் வள்ளுவன்.
அன்பின் வழியில் இயங்கும் உடம்பே உயிருள்ள உடம்பாகும்
அன்பு இல்லாதவனின் உடம்பு எலும்பின் மீது தோல்போர்த்தப்பட்ட வெற்றுடம்பே
என்ற வள்ளுவனின் கூற்றுக்கிணங்க
அன்பின் உறைவிடமாக ஆதரவு கரம் நீட்டும் ஆதாரமாக காவல்துறை திகழவேண்டும்.
நல்ல மனிதர்களும் காவல்துறையில் இருக்கிறார்கள் என்று சொல்லுவதை விடுத்து நல்ல மனிதர்கள் மட்டும் தான் காவல்துறையில் இருக்கிறார்கள் என்று சொல்லும் காலம் வரவேண்டும்.
அதுவே நம் நாட்டின் பண்பாட்டை உலகறியச் செய்யும்
நன்றி