ஏழைகளின் எட்டாக்கனி மருத்துவம்

கண்ணியத்திற்குரிய சமுதாய சொந்தங்களே நம் அனைவரின் மீதும் இறைவனின் அமைதியும் சமாதானமும் உண்டாவதாக.

இன்று பலரும் பேசத் தயங்கும் ஏழைகளின் எட்டாக் கனியாய் ஆகிப்போன மருத்துவம் குறித்த விழிப்புணர்வு பதிவு

இன்றைய கால கட்டத்தில் மருத்துவம் என்பது ஏழைகளுக்கு எட்டாக்கனியாகி வருவது யாரும் மறுக்க முடியாததாகும். மருத்துவ சிகிச்சை பலனின்றி இறக்கும் 70 சதவிகித மக்கள் ஏழைகளாக இருப்பதின் மூலம் இதனை அறியலாம்.

ஒரு ஏழ்மையானவன், சாதாரண நோய்களுக்கு மருத்துவமனையை நாடுவது இல்லை, அதற்கு பல்வேறு காரணங்கள் கற்பிக்கப்பட்டாலும் மிக முக்கியமான காரணம் எது?

தற்போது நாட்டில் நிலவும் கல்விக் கொள்ளையும், பேராசையும், மனிதாபிமானம் மறித்து போனதும் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?

மருத்துவர்கள் மனிதாபிமானம் இல்லாமல் மக்களை சுரண்டும் பெருச்சாளிகளாக மாறியதற்கு காரணம் அவர்கள் படிக்கும் காலத்தில் மருத்துவ கல்விக்காக பல லட்சக்கணக்கான ரூபாய்களை இலஞ்சமாகவும் இன்னபிற செலவுகளாகவும் செய்திருக்கிறார்கள்.

அரசியல்வாதிகள் தேர்தல்களில் போட்டியிடும் போது செலவு செய்யும் பொருளாதாரத்தை வெற்றி பெற்றதற்கு பின்னால், செலவு செய்ததைவிடப் பன்மடங்கு பொருளாதாரத்தை ஈட்டுவதற்கு முறையற்ற வழிகளில் முயற்சி செய்யும் அதே நிலையைத்தான் மருத்துவர்களும் கையில் எடுக்கிறார்கள்.

எனது வாழ்வில் நடந்த ஒரு அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

நான் சில காலம் முன்பு சென்னையில் ஒரு பெரிய மருந்துக் கம்பேனியின் பிரதிநிதியாக வேலை செய்துவந்தேன். எங்கள் பணி நாங்கள் சார்ந்த கம்பெனியினுடைய மருந்து பொருட்களை மருத்துவர்களுக்கு அறிமுகப்படுத்துவது. அதனை மருத்துவர்கள் தங்கள் பிரஸ்கிரிப்ஸனில் எழுத வைக்க படாத பாடு படுவோம்.

அதில் நான் சந்தித்த மருத்துவர்களில் சிலரின் நடவடிக்கைகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். எல்லா மருத்துவர்களையும் பட்டியலிட்டால் ஒரு வாரம் போதாது.

சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையின் மருத்துவர் ஒருவர், அவரை மருந்து கம்பேனி பிரதிநிதிகள் செவ்வாய்கிழமைகளில் மட்டுமே சந்திக்க முடியும்.

வரும் பிரதிநிதிகள் பெரிய கம்பெனியை சேர்ந்தவர்களா? அந்த கம்பெனி மருந்துகளை விற்பதால் தனக்கு எவ்வளவு இலாபம் கிடைக்கும் என்பதை அறிந்து பிரதிநிதிகளை உள்ளே அனுமதிப்பார்.

அப்படி சந்திக்கும் போது அவர் மருந்தின் தரத்தையோ, அதன் குணத்தையோ பார்க்க மாட்டார், மாறாக ஒரே கேள்வி தான்.

உன் கம்பேனி மருந்தை நோயாளிகளுக்கு எழுதினால் எனக்கு எத்தனை சதவிகிதம் பணமாக அல்லது மருந்துகளாக அல்லது இரண்டும் சேர்த்து இனாமாக கொடுக்கும் உன் கம்பேனி? என்று வாய்கூசாமல் கேட்பார்.

மருந்து கம்பெனி பிரதிநிதிகள் ஒவ்வொருவரும் தங்கள் கை பேக்குகளில் சாம்பிள் மருந்துகளை வைத்திருப்பார்கள். அதையும்கூட தனது மேஜையில் அல்லி வைத்துவிட்டு செல் என்று சொல்லக்கூடியவர்.

அப்படிக் கொடுக்கப்படும் சாம்பிள் மருந்துகளை கூட எந்த நோயாளிக்கும் இலவசமாக வழங்க மாட்டார். அவரின் மருத்துவமனையில் நடத்தும் மருந்து கடையில் வைத்து விற்பனை செய்து விடுவார்.

அவருடைய வீட்டில் இருக்கும் 90% வீட்டு உபயோக பொருட்கள் பல்வேறு மருந்து கம்பேனிகளால் கொடுக்கப்பட்டதாகத்தான் இருக்கும்.

இப்படிப்பட்டவரிடம் எப்படி நல்ல மருத்துவத்தை, ஏழைகளுக்கான மருத்துவத்தை எதிர்பார்ப்பது?

மருத்துவரை மக்களில் பலர் கடவுளாக காணும் உலகில் தான் இப்படிப்பட்ட ஜென்மங்கள் இருக்கின்றது என்பதை வருத்தத்தோடு பதிவு செய்கின்றேன்.

அந்த ஒரு மருத்துவர் மட்டும் இப்படி அல்ல, நான் அறிந்த வரையில் சென்னையில் உள்ள மருத்துவர்களில் 90% சதவிகித மருத்துவர்கள் இப்படித்தான் இருக்கின்றனர்.

ஆனால் இப்படிப்பட்ட மருத்துவர்களிடம் தான் மக்கள் கூட்டம் அலை மோதுகின்றது. இவர்கள் மீது தான் மக்கள் நம்பிக்கையும் வைக்கின்றனர்.

நல்ல மனிதர்களும் மருத்துவ துறையில் இருக்கத்தான் செய்கின்றனர். அவர்களில் ஒருவர் மடிப்பாக்கத்தில் கிளினிக் நடத்தி வந்தார். தற்போது இறந்துவிட்டார்.

இவர், வரும் பிரதிநிதிகள் பெரிய கம்பேனியை சேர்ந்தவர்களா என்பதை பார்க்க மாட்டார். மாறாக நல்ல கம்பேனியா? நல்ல மருந்துகளை குறைந்த விலையில் கொடுக்கிறார்களா என்றே பார்ப்பார்.

இனாம் கேட்கவும் மாட்டார், நாமாக வம்படியாக கொடுத்தால் அடுத்த நாளில் இருந்து நம் மருந்தை எழுத மாட்டார்.

மேலும் தன்னிடம் வரும் நோயாளிகளின் பொருளாதார சூழலை அறிந்து விசாரித்து மருந்து எழுதிக் கொடுப்பவர்.

இப்படிப்பட்ட மருத்துவருக்கு நோயாளிகளின் வருகை மிக மிக குறைவு. இப்படிப்பட்ட நல்லவர்கள் மிகக் குறைவாகவே உள்ளனர் என்பது வருந்தத் தக்கதே.

மருத்துவர்கள் இப்படி என்றால் மருந்து கம்பேனிகள், நோயாளிகளின் இரத்தத்தை உறுஞ்சும் அட்டைகள். இவர்களின் அட்டூளியத்தை எளிதில் பட்டியலிட முடியாது. சாதாரண பாராசிடமால் 650 எம்ஜி மாத்திரையின் தயாரிப்பு மற்றும் இதர செலவு வெறும் 05- 10 பைசா மட்டுமே… அதனை சந்தையில் 2 ரூபாயிலிருந்து 4 ரூபாய் அதற்கு மேலும் விற்க்கப்படுகின்றது.

மருந்து கடை வைத்து நடத்துபவர்களும் மருத்துவர்களுக்கும் மருந்து கம்பெனிகளுக்கும் சளைத்தவர்கள் அல்லர்.

சாமியே வரம் கொடுத்தாலும் பூசாரி மனது வைத்தால் தான் வரம் கிடைக்கும் என்பதைப்போல, மருத்துவரே தனது பிரஸ்கிரிப்ஸனில் நாம் பரிந்துரைக்கும் மருந்தை எழுதினாலும் மருந்து கடையில் ஸ்டாக் வைக்க மருந்து கடைக்காரனிடம் பேரம் பேச வேண்டும்.

மருந்து கடைக்காரனும் தன் பங்குக்கு 30 சதவிகிதத்திலிருந்து 50 சதவிகிதம் வரை ஆஃபர் பெற்றுக் கொள்வான்.

இப்படி கொள்ளை இலாபத்தில் இயங்கும் மருத்துவத்துறையை அரசு கண்டு கொள்வது இல்லை. காரணம் அரசில் அங்கம் வகிக்கும் அரசு அதிகாரிகள் முதல் அரசியல்வாதிகள் வரை அந்த மருந்து கம்பெனிகளில் இன்வெஸ்ட்மெண்ட் செய்பவர்களாகவும் கையூட்டு பெறுபவர்களாகவும் இருப்பதனால் எதையும் அவர்கள் கண்டு கொள்வது இல்லை.

இவர்கள் மாறுவார்கள் என எதிர் பார்ப்பது முட்டாள் தனம். மாற்றப்பட வேண்டும். அது மக்களின் கைகளில் தான் உள்ளது.

நன்றி

அன்புடன்
முத்துப்பேட்டை அலீம்

About வலையுகம் அலீம்

Check Also

என்னங்க சார் உங்க சட்டம்

1. கொரோனா வைரஸ் உலகெங்கும் கடுமையாக பரவி வந்த நிலையில் எவ்வித முன்னேற்பாடும் செய்யாமல் நமக்கென்ன போக்கோடு செயல்பட்ட அரசு, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *