Unity is Strength | குழப்பங்களும் ஒற்றுமையின்மையும் தீர்வு என்ன?
பொருளடக்கம்
பொருளடக்கம்
நபியின் முன்னறிவிப்பு
சமுதாய அமைப்புகளை குறை பேசி திரியும் நபர்கள், சமுதாயத்தில் ஒற்றுமை இல்லை என வருத்தப்படுபவர்கள், பிறைக்காக சர்ச்சை செய்து கொண்டிருப்பவர்கள் சிறிது நாட்களாக புலம்பக் கூடியதை அதிகம் பார்க்கிறோம். அது நடிப்போ அல்லது உண்மையின் வெளிப்பாடோ? எதுவாகவும் இருந்து விட்டுப் போகட்டும்.
நபி (ஸல்) அவர்களுக்கு பின்னால் ஆட்சி அமைத்த நான்கு கலீபாக்களின் காலத்திலேயே ஒற்றுமை சீர்குலைந்தது. இது நபியின் முன்னறிவிப்பு மேலும், இது யுக முடிவு நாள் வரை தொடரும் என நபி (ஸல்) அவர்கள் முன்னறிவிப்பு செய்து தான் உள்ளார்கள்.
எந்த அமைப்பும் ஒற்றுமையை சீர்குலைக்க விரும்புவதில்லை. அதுபோல் தற்காலத்தில் எந்தத் தனி மனிதரும் மனிதப் புனிதராகவும் இருக்கவில்லை.
கலீஃபா அப்துல் மலிக் இப்னு மர்வான் அவர்களின் ஒரு கருத்தை பாருங்கள்…
“நாங்கள் அபூபக்கர் ஆகவும் உமராகவும் இருக்க வேண்டும் என்று நீங்கள் ஆசைப்படுகிறீர்கள்”
“ஆனால் நீங்கள் அபூபக்கர் காலத்து மக்களைப் போலவும், உமர் காலத்து மக்களைப் போலவும் இருப்பதற்கு தயார் இல்லை.”
இது எவ்வளவு உண்மையான வார்த்தை, ஒரு சமூகம் என்பது அதில் அங்கம் வகிக்கக்கூடிய ஒவ்வொரு மனிதரும் அடக்கம். நம்மில் நியாயமும், நேர்மையும், நீதியும், ஒற்றுமையும் இல்லை என்றால் அது ஒட்டுமொத்த சமூகத்திலும் பிரதிபலிக்கத்தான் செய்யும்.
உஸ்மான் (ரலி) ஆட்சி
நபி (ஸல்) அவர்கள் மதீனாவின் கோட்டைகளில் ஒன்றின் மீது ஏறிக்கொண்டு (நோட்டமிட்டபடி), “நான் பார்க்கின்றவற்றை நீங்கள் பார்க்கிறீர்களா?
நான் மழைத்துளிகள் விழுவதைப் போன்று உங்கள் வீடுகள் நெடுகிலும் குழப்பங்கள் நிகழப்போவதைப் பார்க்கிறேன்” என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
– மேற்கண்ட ஹதீஸ் உசாமா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அறி : உசாமா பின் ஸைத் (ரலி)
நூல் : ஸஹீஹ் முஸ்லிம் 5528
ஆக இந்த குழப்பங்கள், ஒற்றுமையின்மை உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு காலத்தில் தோன்றியதே… இது யுக முடிவு நாள் வரை தொடரத்தான் செய்யும்.
அஹ்னஃப் பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்…
(அலீ (ரலி) அவர்களது காலத்தில் உள்நாட்டு அரசியல் குழப்பம் தலைதூக்கியிருந்த காலகட்டத்தில்) நான் இந்த மனிதரை (அலீ (ரலி) அவர்களை) நாடிப் புறப்பட்டேன். அப்போது என்னை அபூபக்ரா (ரலி) அவர்கள் எதிர்கொண்டு, “எங்கே செல்கிறீர்?” என்று கேட்டார்கள்.
நான், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய பெரிய தந்தையின் மகன் -அதாவது அலீ (ரலி)- அவர்களுக்கு உதவப்போகிறேன்” என்று சொன்னேன். அப்போது அவர்கள், “அஹ்னஃபே! திரும்பிச் சென்றுவிடுங்கள்.
ஏனெனில்,அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இரண்டு முஸ்லிம்கள் தம் வாட்களால் ஒருவரையொருவர் சந்தித்(து சண்டையிட்டு மடிந்)தால் அவர்களில் கொன்றவர், கொல்லப்பட்டவர் ஆகிய இருவருமே நரகத்திற்குச் செல்வார்கள்”என்று கூறியதை நான் கேட்டேன்.
அப்போது “அல்லாஹ்வின் தூதரே! இவர் கொலைகாரர் (தண்டனை பெறுவது சரிதான்); ஆனால், கொல்லப்பட்டவரின் நிலை என்ன?” என்று கேட்கப்பட்டது. அல்லது நான் கேட்டேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “கொல்லப்பட்டவரும் தம் தோழரைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன்தான் இருந்தார்” என்று பதிலளித்தார்கள்” என்றார்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அறி : அஹ்னஃப் பின் கைஸ் (ரஹ்)
நூல் : ஸஹீஹ் முஸ்லிம் 5533
ஆகவே குழப்பங்களும் ஒற்றுமையின்மையும் நம் சமூகத்தின் மீது இறைவனால் ஏவப்பட்டது தான் அதிலிருந்து தவிர்ந்து கொள்வது எப்படி என்பதை மட்டும் தேடுவது தான் சரி. அந்த வழிகாட்டுதலையும் இஸ்லாம் வழங்கி தான் உள்ளது.
ஒற்றுமை இன்மை – குழப்பம் உங்களை அழித்துவிடும்
5529.அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
விரைவில் குழப்பங்கள் சில தோன்றும். அவற்றுக்கிடையே (மௌனமாகி) அமர்ந்திருப்பவர், (அவற்றுக்காக) எழுந்து நிற்பவரை விடவும், அவற்றுக்கிடையே எழுந்து நிற்பவர், நடப்பவரை விடவும், அவற்றுக்கிடையே நடப்பவர், (அவற்றை நோக்கி) ஓடுபவரைவிடவும் சிறந்தவர் ஆவார்.
அவற்றில் யார் தம்மை ஈடுபடுத்திக்கொள்கிறாரோ அவரை அழிக்க அவை முற்படும்.
அப்போது யார் ஒரு புகலிடத்தைப் பெறுகிறாரோ, அவர் அதன் மூலம் தம்மைத் தற்காத்துக் கொள்ளட்டும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அறி : அபூஹுரைரா (ரலி)
நூல் : ஸஹீஹ் முஸ்லிம் 5529
மேற்குறிப்பிட்ட ஹதீஸின் அடிப்படையில் குழப்பங்களின் நேரத்தில் ஒன்று மௌனமாக இருக்க வேண்டும். அல்லது ஒரு புகலிடத்தை தேட வேண்டும். இதுவல்லாது அந்த குழப்பத்திற்குள் உள்ளே சென்றால் அந்தக் குழப்பம் உங்களை அழித்துவிடும்.
ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மதீனா புறநகரில் மேட்டுப் பகுதியான) “ஆலியா”விலிருந்து வந்து பனூ முஆவியா பள்ளிவாசலைக் கடந்து சென்றார்கள்.
அப்போது பள்ளிவாசலுக்குள் நுழைந்து இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அவர்களுடன் நாங்களும் தொழுதோம். பிறகு நீண்ட நேரம் தம் இறைவனிடம் பிரார்த்தித்தார்கள்.
பிறகு எங்களை நோக்கித் திரும்பி, “நான் என் இறைவனிடம் மூன்று கோரிக்கைகளை முன்வைத்துப் பிராத்தித்தேன். அவற்றில் இரண்டை எனக்குத் தந்தான்; ஒன்றை மறுத்து விட்டான்.
நான் என் இறைவனிடம், “என் சமுதாயத்தாரை (ஒட்டுமொத்தமாக) பஞ்சத்தால் அழித்துவிடாதே” என்று பிரார்த்தித்தேன். அதை எனக்கு அவன் வழங்கினான்.
அவனிடம் நான் “என் சமுதாயத்தாரை வெள்ள நீரில் (ஒட்டுமொத்தமாக) மூழ்கடித்துவிடாதே” என்று பிரார்த்தித்தேன். அதையும் எனக்கு அவன் வழங்கினான்.
அவனிடம் நான் “(என் சமுதாயத்தார்) தமக்கிடையே மோதிக்கொள்ளக்கூடாது” எனப் பிரார்த்தித்தேன்.
ஆனால், (அந்தப் பிரார்த்தனையை ஏற்க) அவன் மறுத்துவிட்டான்” என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அறி : சஅத் பின் அபீவக்காஸ் (ரலி)
நூல் : ஸஹீஹ் முஸ்லிம் 5539
அல்லாஹ்வே மிக்க அறிந்தவன்…
எமது முந்தைய பதிவை படிக்க…
தந்தையின் அறிவுரை
அன்புடன்
முத்துப்பேட்டை அலீம்