பொருளடக்கம்
நபி வழியில் நம் தொழுகை | Prayer
நபி வழியில் நம் தொழுகை அமைந்தால் மட்டும் தான் தொழுகை ஏற்கப்படும். நபி வழியில் நம் தொழுகை அமையவில்லை எனில் தொழுகை நமக்கு பயனளிக்காது. ஆகவே பல்வேறு நபி மொழிகள் மூலம் நாம் இப்பதிவில் நபி வழியில் நம் தொழுகை எவ்வாறு அமைய வேண்டும் என்பதை பார்ப்போம்.
பிஸ்மில்லாஹ் கூறித் உளூச் செய்யத் துவங்குதல்
بســـم الله நூல்கள்: அபூதாவூத்,இப்னு மாஜா, அஹ்மத்.
உளூவை வலப்புறத்திலிருந்து ஆரம்பித்தல்
நீங்கள் உளூச் செய்தால் வலப்புறமிருந்து துவங்குங்கள் என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: நஸயீ, திர்மிதி, இப்னு மாஜா
கைககளை மணிக்கட்டு வரை கழுவுதல்
நபி صلى الله عليه وسلم அவர்கள் உளூச் செய்யும்போது தமது இரு கைகளையும் மணிக்கட்டுவரை கழுவினார்கள். அவ்ஸ் பின் அவ்ஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: அஹ்மத், நஸயீ
பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து உளூச் செய்வோர் முதலில் இரு கைகளையும் கழுவிய பின்பே அப்பாத்திரத்தில் கையை விடவேண்டும்.
“உங்களில் ஒருவர் தூங்கி எழுந்தால் கையை மூன்று முறை கழுவதற்கு முன் தனது கையைப் பாத்திரத்தில் விடக்கூடாது” என صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம்
பாத்திரத்திலிருந்து ஒளூச் செய்தால்
உஸ்மான் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் தண்ணீர் கொண்டு வரச்செய்து (பாத்திரத்திலிருந்து) ஊற்றி மூன்று முறை மணிக்கட்டு வரை கழுவினார்கள். பிறகு தனது வலது கையை பாத்திரத்தில் நுழைத்து வாய் கொப்பளித்தார்கள். நாசிக்கும் தண்ணீர் செலுத்தினார்கள். பிறகு மூன்றுமுறை முகத்தைக் கழுவினார்கள். இரண்டு கைகளாலும் மூன்றுமுறை முழங்கை வரை கழுவினார்கள். பின்பு தலைக்கு மஸஹு செய்தார்கள். பின்பு இரண்டு கால்களையும் கரண்டை வரை மூன்றுமுறை கழுவினார்கள். பிறகு நபி صلى الله عليه وسلم அவர்கள் இப்படித்தான் ஒளூச் செய்வதை நான் பார்த்திருக்கிறேன் என்றார்கள். அறிவிப்பவர்: உஸ்மான் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம்
பல் துலக்குதல், வாய் கொப்புளித்தல், மூக்கைச் சுத்தம் செய்தல்
உளூச் செய்யும்போது பல் துலக்குவதை நபி صلى الله عليه وسلم அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.
“என சமுதாயத்திற்குச் சிரமாகி விடும் என்றில்லாவிட்டால் ஒவ்வொரு உளூவின் போதும் பல் துலக்குவதை கட்டாயமாக்கி இருப்பேன்” என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். ஹுதைபா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: நஸயீ, அபூதாவூத், அஹ்மத்
நபி صلى الله عليه وسلم அவர்கள் உளூச் செய்தபோது வாய் கொப்பளித்து மூக்கிற்கு (வலது கையால்) தண்ணீரை செலுத்தி இடது கையால் சிந்தினார்கள். அறிவிப்பவர்: அப்துல் கைர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: நஸயீ
முகம், கைகளை கழுவுதல்
நபி صلى الله عليه وسلم அவர்கள் உளூச் செய்யும்போது மூன்று முறை முகத்தைக் கழுவினார்கள். பிறகு தமது கைகளால் (தண்ணீர்) எடுத்து, தமது இரு கைகளையும் மூட்டுவரை மூன்று முறை கழுவினார்கள். உஸ்மான் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம்
தலைக்கும், காதுக்கும் மஸஹ் செய்யும் முறை
நபி صلى الله عليه وسلم அவர்கள் தமது இரண்டு கைகளையும் தலையின் முன்பாகத்தில் வைத்து பிடரி வரை தடவி, மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே கைகளைக் கொண்டு வந்தார்கள். அப்துல்லாஹ் பின் ஸைத் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதீ, நஸயீ, அபூதாவூத்,, இப்னு மாஜா, அஹ்மத்
உஸ்மான் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் உளூச் செய்தபோது தண்ணீரில் கையை நுழைத்து தண்ணீர் எடுத்து தலைக்கும், காதுக்கும் மஸஹ் செய்தார்கள். மேலும் இப்படித்தான் நபி صلى الله عليه وسلم அவர்கள் உளூச் செய்தார்கள் என்றும் கூறினார்கள். இப்னு அபீ முலைக்கா நூல்: அபூதாவூத்
அலி رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் ஒளுச் செய்யும்போது இரண்டு கைகளையும் மூன்முறை கழுகி, முகத்திஅயும் மூன்றுமுறை கழுகி தலைக்கு ஒரே ஒரு தடவை மட்டும் மஸஹு செய்தார்கள். அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் இப்னு அபீலைலா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்:அபூதாவூது
மஸஹ் என்பது ஈரக்கையால் தலையையும் காதுகளையும் தடவுவதாகும் மஸஹ் ஒருமுறை செய்யவேண்டும். சிலர் பிடரியில் மஸஹ் செய்கின்றனர். இதற்கு ஆதாரப்பூர்வமான எந்த ஹதீஸும் இல்லை.
நபி வழியில் நம் தொழுகை
நபி வழியில் நம் தொழுகை – கால்களை கழுவுதல், குதிகால்களையும் சரியாக கழுவுதல்
உளூவின் இறுதிச் செயலாக கால்களைக் கரண்டை வரை கழுவவேண்டும். நபி صلى الله عليه وسلم அவர்கள் தம் கால்களைக் கரண்டைவரை மூன்று முறை கழுவினார்கள். உஸ்மான் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: நஸயீ, அபூதாவூத்
கால்களை கழுவும்போது கவனமாகக் கழுவவேண்டும். நபி صلى الله عليه وسلم அவர்கள் “குதிகால்களைச் சரியாகக் கழுவாதவர்களுக்கு நரகம்தான்” என்று கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரி
உளூவை வரம்பு மீறிச் அதிகமாக செய்யலாகாது
நபி صلى الله عليه وسلم அவர்கள் உளூச் செய்யும்போது ஒவ்வொரு தடவை கழுவினார்கள். இப்னு அப்பாஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, திர்மிதி, நஸயீ, அபூதாவூத்,, இப்னு மாஜா, அஹ்மத்
நபி صلى الله عليه وسلم அவர்கள் இரண்டிரண்டு தடவைகள் கழுவி உளூச் செய்துள்ளார்கள். அப்துல்லாஹ் பின் ஸைது رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, அஹ்மத்
நபி صلى الله عليه وسلم அவர்களிடம் ஒரு கிராமவாசி வந்து உளூச் செய்வது பற்றிக் கேட்டார். நபி صلى الله عليه وسلم அவர்கள் மும்மூன்று தடவை கழுவி உளூச் செய்து காட்டிவிட்டு, இதுதான் உளூச் செய்யும் விதமாகும். யார் இதைவிட அதிகப்படுத்துகிறாரோ அவர் வரம்பு மீறி விட்டார்; தீங்கிழைத்து விட்டார்; அநியாயம் செய்து விட்டார்” என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அம்ரு பின் ஷுஐபு رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: அஹ்மத், நஸயீ, இப்னு மாஜா
காலுறைகள் மீது மஸஹ் செய்தல்
ஒருவர் உளூச் செய்து விட்டு காலுறை அணிந்து பிறகு உளூ முறிந்து விட்டால் திரும்ப உளூச் செய்யும்போது அவர் காலுறையைக் கழற்ற வேண்டிய அவசியமில்லை. காலைக் கழுவவேண்டிய நேரத்தில் காலுறையின் மேல் பகுதியில் மட்டும் மஸஹ் செய்தால் போதுமானது. கடமையான குளிப்பின்போது மட்டும் கட்டாயம் கழற்ற வேண்டும்.
நான் ஒரு பிரயாணத்தின்போது நபி صلى الله عليه وسلم அவர்களுடன் இருந்தேன். அவர்கள் (உளூச் செய்யும்போது) அவர்களது இரு கால் உறைகளையும் நான் கழற்றுவதற்குக் குனிந்தேன். அப்போது நபி صلى الله عليه وسلم அவர்கள் அதை விட்டுவிடும்; கால்கள் இரண்டும் சுத்தமாக இருக்கும்போதுதான் உறைகளை அணிந்தேன் என்று கூறிவிட்டு அவ்விரு கால் உறைகளின் மீது மஸஹ் செய்தார்கள். அறிவிப்பவர்: முகீரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்
நாங்கள் பிரயாணத்தில் இருந்தபோது “ஜனாபத் தவிர மலஜலம், தூக்கம் போன்றவற்றிற்காக காலுறையை மூன்று பகல், மூன்று இரவுகள் கழற்றவேண்டிய அவசியமில்லை” என்று நபி صلى الله عليه وسلم கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஃப்வான் இப்னு அஸ்ஸாவ் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: திர்மிதி, திர்மிதி, இப்னு மாஜா, இப்னுகுஸைமா
நபி வழியில் நம் தொழுகை
உளூச் செய்தபின் கூறவேண்டியவை
أَشْهَدُ أَنْ لاَّ إلَهَ إِلَهَ إِلاَّالله وَحْدَهُ لاَشَرِيْكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًاعَبْدُهُ وَرَسُولُهُ
அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹூ வஹ்தஹு லாஷரீகலஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு என்று கூறினால் சுவனத்தின் எட்டு வாயில்களும் அவருக்காகத் திறக்கப்படுகின்றன என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்:முஸ்லிம்
பொருள்: வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு எவருமில்லை; அவன் ஏகன்; அவனுக்கு நிகராக எவருமில்லை என்று உறுதியாக நம்புகிறேன். முஹம்மத் صلى الله عليه وسلم அவர்கள் அவனது அடியாராகவும் தூதராகவும் உள்ளார்கள் என உறுதியாக நம்புகிறேன்.
கடமையான குளிப்பு
தொழுகைக்கு உளூ எந்த அளவிற்கு அவசியமோ அந்த அளவிற்கு குளிப்பு கடமையானவர் குளிப்பது அவசியம். உடலுறவின் மூலமோ அல்லது உறக்கத்திலோ அல்லது விழிப்பிலோ ஆணுக்கோ பெண்ணுக்கோ விந்து வெளிப்பட்டால் குளித்தேயாக வேண்டும். குளிக்காமல் தொழக்கூடாது.
ஸ்கலிதம் ஏற்பட்டால்
“இச்சை நீர் வெளிப்பட்டால் உளூச் செய்ய வேண்டும். விந்து வெளிப்பட்டால் குளிக்க வேண்டும்” என நபி صلى الله عليه وسلم அவர்க்ள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அலீ رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: அஹ்மத், தாரமீ
“ஒரு பெண்ணுக்கு ஸ்கலிதம் ஏற்பட்டால் அவள் குளிப்பது அவசியமா?” என்று உம்மு கலைம் (ரலி), நபி صلى الله عليه وسلم அவர்களிடம் கேட்டபோது “ஆம்” என்று பதிலளித்தார்கள்” அறிவிப்பவர்: உம்முஸலமா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம்
மாதவிடாய் ஏற்படுதல்
பெண்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவர்கள் தொழவோ, நோன்பு நோற்கவோ, உடலுறவு கொள்ளவோ கூடாது. மாதவிடாய் நின்ற பிறகு குளித்து தூய்மையானதும் தொழலாம் நோன்பு நோற்கலாம்.
“மாதவிடாய் ஏற்படும்போது தொழுகையை விட்டுவிடு. மாதவிடாய் நின்ற பின்பு குளித்து விட்டுத் தொழுதுகொள்!” என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரி
மாதவிடாய் காலங்களில் விடுபட்ட தொழுகைகளைத் திருப்பித் தொழ வேண்டியதில்லை
“எங்களுக்கு மாதவிடாய் ஏற்படும் போது தொழுகை, நோன்பு ஆகியவைகளை விட்டு விடுமாறும், மாதவிடாய் நின்ற பிறகு விடுபட்ட நோன்புகளை நோற்குமாறும் விடுபட்ட தொழுகைகளைத் தொழ வேண்டியதில்லை என்றும் நபி صلى الله عليه وسلم அவர்கள் கட்டளையிட்டார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம்
பிரசவ இரத்தம் வெளிப்படுதல்
பிரசவ இரத்தப் போக்கு சம்பந்தமாக நேரடியாக ஆதாரங்கள் இல்லாவிட்டாலும் கூட மாதவிடாய் இரத்தப் போக்குக்கு என்ன சட்டமோ அதே சட்டம் தான் இதற்கும் பொருந்தும்.
தொடர் இரத்தப் போக்கு ஏற்பட்டால்
பெண்களில் சிலர் மாதவிடாயின் போது மட்டுமின்றி எப்போதும் இரத்தப் போக்கு உள்ளவர்களாக இருப்பர். இது ஒரு வகை நோய். இதன் காரணமாக தொழுகையையும் இதர வணக்கங்களையும் விட்டுவிடக் கூடாது!. அவர்களின் வழமையான மாதவிடாய் நாட்கள் முடிந்து குளித்துக் கொள்ள வேண்டும். பிறகு துணியால் கட்டிக்கொண்டு ஒவ்வொரு தொழுகைக்கும் உளூச்செய்து தொழ வேண்டும்.
ஃபாத்திமா பிந்த் அபீஹுபைஷ் (ரலி) என்ற பெண்மனி நபி صلى الله عليه وسلم அவர்களிடம் வந்து “நான் இரத்தப் போக்குடையவளாக இருக்கிறேன், தூய்மையாவதே இல்லை. எனவே தொழுகையை நான் விட்டு விடலாமா?” எனக் கேட்டார். அதற்கு நபி صلى الله عليه وسلم அவர்கள் “உனது மாதவிடாய் நாட்களில் மட்டும் தொழுகையை விட்டுவிட்டு, குளித்து தொழுவாயாக! இரத்தம் தொடர்ந்து கொண்டிருந்தாலும் பரவாயில்லை!” என பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: முஸ்லிம், திர்மிதீ
நபி صلى الله عليه وسلم அவர்கள் காலத்தில் ஒரு பெண் இரத்தப் போக்கு நோயால் பீடிக்கப்பட்டிருந்தார். அவர்களுக்காக நபி صلى الله عليه وسلم அவர்களிடம் நான் சட்ட விளக்கம் கேட்டபோது, இந்த நோய் வருவதற்கு முன் அந்த பெண்ணுக்கு வழக்கமாக மாதவிடாய் வந்து கொண்டிருந்த நாட்களைக் கழித்து அந்த நாட்கள் முடிந்ததும் குளித்துவிட்டுத் துணியால் இறுகக் கட்டிக்கொண்டு அவள் தொழவேண்டும்” என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: உம்முஸலமா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல் நஸயீ
அபூதாவூதின் அறிவிப்பில் ஒவ்வொரு தொழுகைக்கும் உளூச் செய்துகொள்! என்று காணப்படுகின்றது.
நபி வழியில் நம் தொழுகை – குளிக்கும் முறை
கடமையான குளிப்பை நிறைவேற்று முன் மர்மஸ்தானத்தைக் கழுவி உளூச் செய்து கொள்ள வேண்டும். உடல் முழுவதும் தண்ணீர் பட்டு நனையுமாறு குளிக்க வேண்டும். குளித்தபின் தொழ வேண்டியிருந்தால் மறுபடியும் உளூச் செய்ய வேண்டியதில்லை. குளிக்கும் போது செய்த உளூவே போதுமானது.
நபி صلى الله عليه وسلم அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றும் போது தம் இரு கைகளையும் கழுவிவிட்டு தொழுகைக்குச் செய்வது போல் உளூச் செய்தார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரி
நபி صلى الله عليه وسلم அவர்களுக்கு தண்ணீர் எடுத்து வைத்தேன். தமது கைகளின் மீது (சிறிதளவு தண்ணீர்) ஊற்றி இரண்டு, மூன்று முறை கழுவினார்கள். பின்பு வலக்கரத்தால் சிறிதளவு தண்ணீரை இடக்கரத்தில் ஊற்றி மர்ம ஸ்தானத்தைக் கழுவினார்கள். பின் தம் கைகளைத் தரையில் தேய்த்தார்கள். பின்பு வாய்க் கொப்பளித்து, மூக்கையும் சுத்தம் செய்து முகத்தைக் கழுவினார்கள். இரு கைகளையும் கழுவினார்கள். பின்னர் தலையை மூன்று முறை கழுவி விட்டு தமது மேனியில் தண்ணீரை ஊற்றிக் கொண்டார்கள். பின்பு சற்று விலகி நின்று தம் கால்களைக் கழுவிக் கொண்டார்கள். அறிவிப்பவர்: மைமூனா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம்
நபி صلى الله عليه وسلم அவர்கள் குளித்தபின் உளூச் செய்ய மாட்டார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: அஹ்மத், திர்மிதீ
பெண்கள் சடை போட்டிருந்தால்
சடை போட்டுள்ள பெண்கள் கடமையான குளிப்பைக் குளிக்கும் போது சடையை அவிழ்த்து விட வேண்டிய அவசியமில்லை.
“இறைத்தூதரே! நான் எனது தலை முடியை சடை பின்னிக்கொண்டு இருக்கிறேன்! கடமையான குளிப்புக்காக அதனை அவிழ்த்துத்தான் விட வேண்டுமா?” என நான் கேட்டேன். அதற்கு நபி صلى الله عليه وسلم அவர்கள் “வேண்டியதில்லை, உனது தலையில் மூன்று முறை தண்ணீர் ஊற்றிக் கொள்” என்றார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: அஹ்மத், திர்மிதீ
தயம்மும்
சில நேரங்களில் உளூச் செய்வதற்கோ, கடமையான குளிப்பை குளிப்பதற்கோ தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்படலாம். அல்லது தண்ணீர் இருந்தும் கடுங்குளிர், நோய் காரணங்களால் அதனைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படலாம். அல்லது தண்ணீரும் இருந்து பயன்படுத்தக் கூடிய நிலையும் இருந்து உளூச் செய்வதாலோ, கடமையான குளிப்பை குளிப்பதாலோ குடிப்பதற்கு தண்ணீர் இல்லாது போய் விடுமோ என்ற பயம் ஏற்படலாம். இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் உளூவிற்கும் கடமையான குளிப்பிற்கும் மாற்றுப் பரிகாரமே தயம்மும் என்பதாகும்.
தயம்மும் எப்படி செய்வது
இரு கைகளையும் தூய்மையான மண்ணில் ஒரு முறை அடித்து, கையில் படிந்துள்ள தூசியை வாயால் ஊதிவிட்டு முகத்திலும் மணிக்கட்டு வரை இரு கைகளிலும் தடவிக் கொள்வதே தயம்மும் ஆகும்.
“நீங்கள் நோயாளியாகவோ பயணத்திலோ இருந்தால் உங்களில் எவரேனும் மலங்களித்து விட்டு வந்தாலும் அல்லது பெண்களைத் தீண்டினாலும் (அந்நேரத்தில்) தண்ணீர் கிடைக்காவிட்டால் தூய மண்ணில் தயம்மும் செய்து கொள்ளுங்கள்” (அல்குர்ஆன் 5:6)
“தயம்மும் என்பது முகத்தில் தடவுவதற்காகவும் கைகளில் தடவுவதற்காகவும் ஒரு தடவை கைகளை தரையில் அடிப்பதாகும்” என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள்” அறிவிப்பவர்: அம்மார் பின் யாஸிர் رَضِيَ اللَّهُ عَنْهُ நுல்: அஹ்மத்
மேற்கூறிய இறை வசனத்திலும், ஹதீஸிலும் பொதுவாக கைகள் என்று கூறப்பட்டிருப்பினும் அதே நபித்தோழர் அறிவிக்கும் மற்றோரு அறிவிப்பில் மணிக்கட்டுவரை என்று கூறப்பட்டுள்ளது.
நபி صلى الله عليه وسلم அவர்கள் தம் இரு உள்ளங்கைகளாலும் தரையில் அடித்து, அதில் வாயால் ஊதிவிட்டு அந்தக் கைகளை முகத்திலும் மணிக்கட்டு வரை கைகளிலும் தடவி விட்டு “இவ்வாறு செய்வது உமக்குப் போதுமாகும்” என கூறினார்கள். அறிவிப்பவர்: அம்மார் பின் யாஸிர் رَضِيَ اللَّهُ عَنْهُ நுல்: அஹ்மத்
தயம்மும் செய்து தொழுதபின் தண்ணீர் கிடைத்து விட்டால்
தயம்மும் செய்து தொழுதபின் தண்ணீர் கிடைத்து விட்டால் உளூச் செய்து மீண்டும் அத்தொழுகையை தொழ வேண்டியதில்லை.
இரண்டு நபர்கள் பிரயாணத்தில் சென்றார்கள். தொழுகை நேரம் வந்தது. அப்போது அவர்களிடம் தண்ணீர் இல்லை. எனவே, அந்த இருவரும் சுத்தமான மண்ணில் தயம்மும் செய்து தொழுதனர். பின்பு, அத்தொழுகையின் நேரத்திலேயே அவர்களுக்குத் தண்ணீர் கிடைத்து விட்டது. அப்போது அந்த இருவரில் ஒருவர் உளூச் செய்து விட்டு மீண்டும் தொழுதார். இன்னொருவர் தொழவில்லை. பிரயாணத்திலிருந்து ஊர் திரும்பியதும் நபி صلى الله عليه وسلم அவர்களிடம் இதனை அவ்விருவரும் கூறினர். அப்போது நபி صلى الله عليه وسلم அவர்கள் தொழுகையை மீண்டும் தொழாத நபரை நோக்கி, “நீர் எனது வழிமுறையைக் கடைபிடித்தீர். (தயம்மும் செய்து நீர் தொழுத) உமது தொழுகையையே உமக்கு போதும்” என்றும், உளூச் செய்து விட்டு மீண்டும் தொழுத நபரை நோக்கி “உமக்கு இரு கூலிகள் உள்ளது” என்றும் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஸயீத் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: நஸயீ, அபூதாவூத்
நபி வழியில் நம் தொழுகை
கடுங்குளிரின் கேடு காரணமாக தயம்மும் செய்ததை நபி صلى الله عليه وسلم அங்கீகரித்துள்ளார்கள்
“தாதுஸ்ஸலாஸில்” எனும் போருக்கு நபி صلى الله عليه وسلم அவர்கள் என்னை அனுப்பி வைத்தார்கள். கடுங்குளிரான ஓர் இரவில் எனக்கு ஸ்கலிதம் ஏற்பட்டு விட்டது. குளித்தால் எனக்குக் கேடு ஏற்படும் எனக் கருதிய நான் தயம்மும் செய்து என் தோழர்களுக்கு ஸுப்ஹு (அதிகாலை தொழுகை) தொழுவித்தேன். மதீனாவிற்கு நாங்கள் திரும்பியதும் என் செயல் பற்றி நபி صلى الله عليه وسلم அவர்களிடம் என் தோழர்கள் கூறினர். உடனே நபி صلى الله عليه وسلم அவர்கள் “அம்ரே! குளிப்பு கடமையான நிலையில் உம் தோழர்களுக்குத் தொழுவித்தீராமே” என்று என்னிடம் கேட்டார்கள். “உங்களை நீங்களே அழித்துக் கொள்ளாதீர்கள் என்ற இறை வசனம் என் நினைவுக்கு வந்ததால் தான் தயம்மும் செய்து தொழுதேன்” என்றேன். இதனை கேட்டு நபி صلى الله عليه وسلم அவர்கள் சிரித்தார்களே தவிர குறை காணவில்லை. அறிவிப்பவர்: அம்ர்பின் அல்ஆஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: அஹ்மத், அபூதாவூத்
மேற்கண்ட ஹதீஸிலிருந்து குளிரின் காரணமாகத் தயம்மும் செய்ததை நபி صلى الله عليه وسلم அவர்கள் அங்கீகரித்துள்ளார்கள் என்பது தெளிவாகிறது.
ஆடை
ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழுங்காலம் உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள். (அல்குர்அன் 7:31)
இந்த ஆடைதான் அணிந்து தொழவேண்டுமென்று நிர்ணயிக்கப்படவில்லை. ஆடையணிவது அவரவர்களின் வசதியை பொருத்தது. ஒரே ஒரு துணி மட்டும் உள்ளதென்றால் அதனை அணிந்து கொள்ளலாம்.
நபிصلى الله عليه وسلم அவர்கள் ஒரே ஒரு ஆடையை அணிந்துகொண்டு அதன் இரு ஓரத்தையும் இரு தோள்களின் மீதும் மாற்றிப் போட்டுக்கொண்டு தொழுதார்கள். அறிவிப்பவர்: உமர்பின் அபீஸலமா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரி
தொடைப்பகுதியை மறைக்க வேண்டும்
“தொடைப்பகுதி மறைக்க வேண்டிய பகுதியாகும்” என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள்.” அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரி
பெண்கள் உடல் முழுவதையும் கண்டிப்பாக மறைக்க வேண்டும். ஆனால் முகம், முன்கை, கால் பாதங்கள் ஆகியவற்றை மறைக்கத் தேவையில்லை. சிலர் தொழுகைக்காக காலுறை அணிகின்றனர். இது கட்டாயம் என்றும் எண்ணுகின்றர். நபி صلى الله عليه وسلم காலத்தில் வாழ்ந்த எந்தப் பெண்களும் காலுறை அணிந்து தொழுததாக எவ்வித ஆதாரமும் இல்லை. விரும்பினால் அணியலாம்.
“நபி صلى الله عليه وسلم அவர்கள் ஃபஜ்ர் தொழுகையைத் தொழுதார்கள். முஃமினான பெண்கள் ஆடைகளால் தங்கள் உடல் முழுவதையும் சுற்றி மறைத்தவர்களாக அவர்களுடன் தொழுதார்கள். பின்னர் தங்கள் வீடுகளுக்குச் சென்று விடுவார்கள். அவர்கள் யார் யார்? என்பதை யாரும் அறியமாட்டார்கள்.” அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரி
பருவமடைந்த பெண்
“பருவமடைந்த பெண் முக்காடில்லாமல் தொழுதால் இறைவன் அதை ஏற்றுக்கொள்ள மாட்டான்” என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: அபூதாவூத், திர்மிதி
பார்வையை ஈர்க்ககூடிய வண்ண ஆடைகள்
“நபி صلى الله عليه وسلم அவர்கள் பல வண்ணங்கள் உள்ள ஒரு ஆடையை அணிந்து தொழுதபோது அந்த வண்ணங்களின் பக்கம் பார்வையைச் செலுத்தினார்கள். அவர்கள் தொழுகையை முடித்த பின்னர் “என்னுடைய இந்த ஆடையைக் கொண்டுபோய் அபூஜஹ்ம் வசம் கொடுத்துவிட்டு, அவருடைய (வண்ணங்களில்லாத) ஆடையைக் கொண்டு வாருங்கள். இந்த ஆடை சிறிது நேரத்திற்கு முன் எனது தொழுகையை விட்டு என் கவனத்தைத் திருப்பிவிட்டது” எனக்கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரி
உருவப்படங்கள் பொறிக்கப்பட்ட ஆடைகள்
ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ யிடத்தில் (உருவப் படங்கள் நிறைந்த) ஒரு திரை இருந்தது. அதனால் தங்கள் வீட்டின் ஒரு ஓரத்தை மறைத்திருந்தார்கள். இதை கண்ட நபி صلى الله عليه وسلم ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ யிடம் “உன்னுடைய இந்தத் திரையை நம்மை விட்டும் அகற்றிவிடு. அதிலுள்ள படங்கள் நான் தொழுது கொண்டிருக்கும்போது (என் எண்ணத்தில்) குறிக்கிடுகின்றன” எனக் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரி
நிய்யத்
எந்த ஒரு வணக்க வழிபாட்டுக்கும் நிய்யத் என்ற எண்ணம் அவசியம். ஆகவே தொழுகை என்ற செயலுக்கும் நிய்யத் எனும் எண்ணம் தேவை.
“செயல்கள் யாவும் எண்ணங்களைப் பொருத்ததேயாகும்” என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரி
“நிச்சயமாக இறைவன் உங்கள் உடல்களையோ தோற்றங்களையோ பார்ப்பதில்லை. உங்கள் உள்ளங்களைத்தான் பார்க்கிறான்” என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: முஸ்லிம்
தக்பீர் தஹ்ரீமா
தொழுகையில் ஆரம்பமாக கூறப்படும் தக்பீருக்கு தக்பீர் தஹ்ரீமா எனப்படும்.
“நீ தொழுகைக்காக தயாராகிவிட்டால் முழுமையாகச் உளூச் செய்து கஅபாவை முன்னோக்கி “அல்லாஹு அக்பர் எனக்கூறு” என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: முஸ்லிம்
அல்லாஹு அக்பர் எனக் கூறி இரு கைகளையும் தோள் புஜங்கள் வரையோ அல்லது காது சோனைகள் வரையோ உயர்த்திட வேண்டும்.
“நபி صلى الله عليه وسلم அவர்கள் தொழுகையை ஆரம்பிக்கும்போது தங்களது இரு கைகளையும் இரு தோள் புஜங்கள் வரை உயர்த்தக் கூடியவர்களாக இருந்தார்கள்.” என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரி
“நபி صلى الله عليه وسلم அவர்கள் தொழுகைக்காக நின்றால் தங்களது இரு கைகளின் விரல்களும் மடக்கப்படாமல் இருக்கும் விதமாக தம் இரு கைகளையும் உயர்த்தக் கூடியவர்களாக இருந்தார்கள்.” என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: நஸயீ, திர்மிதீ
உயர்த்திய கைகளை நெஞ்சின் மீதுதான் வைக்க வேண்டும்
“நபி صلى الله عليه وسلم அவர்கள் (தொழுகையில் ஸலாம் கூறும் போது) தமது வலது புறமும், இடது புறமும் திரும்பியதை நான் பார்த்தேன். மேலும் (தொழுகையில்) வலது கையை இடது கையின் மணிக்கட்டு மீது வைத்து நெஞ்சின் மீது வைத்ததைப் பார்த்தேன்.” அறிவிப்பவர்: ஹுல்புத்தாயி رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: அஹ்மத்
“நபி صلى الله عليه وسلم அவர்கள் தங்களது வலது கையை இடது முன்கை மீதும் இடது மணிக்கட்டின் மீதும் இடது குடங்கை மீதும் வைத்தார்கள்.” அறிவிப்பவர்: இப்னு ஹுஜ்ர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: நஸயீ
“நபி صلى الله عليه وسلم அவர்கள் தொழுகையில் நின்ற போது தங்களது வளக்கையைால் இடககையை பிடித்திருந்ததை நான் பார்த்தேன்.” அறிவிப்பவர்: வாயில் பின் ஹுஜ்ர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: நஸயீ
தொப்புளுக்குக் கீழே கைகளைக் கட்டவேண்டும் என்று சில அறிவிப்புகள் இருந்தாலும் அவை அனைத்துமே பலகீனமானவை என்று ஹதீஸ் கலை அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
1, தொழுகையில் தொப்புகளுக்குக் கீழே (இடது) முன்கை மீது (வடது) முன்கையை வைப்பது சுன்னத்தாகும். என அலீ رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் கூறியுள்ளார்கள். நூல்: அபூதாவூத்
2, தொழுகையில் தொப்புகளுக் கீழே முன்கையை, முன்கை மீது வைத்துக் கொள்ள வேண்டும். என அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் குறிப்பிட்டார்கள். நூல்: அபூதாவூத்
இந்த இரண்டு ஹதீஸ்களின் அறிவிப்பாளர் வரிசையில் அப்துர் ரஹ்மான் பின் இஸ்ஹாக் அல் கூஃபி என்பவர் இடம்பெற்றுள்ளார். இவரைப் பற்றி ஹதீஸ் கலை வல்லுனர்களின் வருமாறு:
“பலவீனமானவர்” என இப்னு முயீன், இப்னு ஹிப்பான், அபூஸர்ஆ, அபூஹாதம், இப்னு குஸைமா, உகைலீ, அஜலீ, புகாரி, நவவீ ஆகியோர் விமர்சித்துள்ளனர். “இவரது ஹதீஸ்கள் நிராகரிக்கப்பட வேண்டும்” என அபூஹாதம், ஸாஜி ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர். தம் நூல்களில் பதிவு செய்துள்ள அபூதாவூத் அவர்களும் “இவரது ஹதீஸ்கள் ஏற்கத்தக்கவை அல்ல” என விமர்சனம் செய்துள்ளனர். எனவே இந்த ஆதாரமற்ற செய்தியின் அடிப்படையில் செயல்படலாகாது.
3, “தொப்புளுக்கு கீழே கையை வைப்பார்கள்” என இப்றாஹீம் கூறுவதாக ஒரு செய்தி முஸன்னப் இப்னு ஷைபா என்ற நூலில் உள்ளது. ஆனால் அப்படி வைப்பது யார் என்ற விபரமில்லை. மேலும் இப்றாஹீம் என்பவர் நபி صلى الله عليه وسلم அவர்களின் காலத்தைச் சேர்ந்தவரில்லை.
4, அலீ ரலி அவர்கள் நெஞ்சில் தொப்புளுக்கு மேல் கையைக் கட்டியதாக ஜரீர் அறிவிக்கும் செய்தி அபூதாவூதில் இடம்பெற்றுள்ளது. இங்கு நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் நபி صلى الله عليه وسلم அவர்கள் நெஞ்சில் கட்டியதாக தெளிவான ஹதீஸ் இருக்கும்போது அதையே ஏற்கவேண்டும்.
ஸனா ஓதுதல் அல்லாஹு அக்பர் என தக்பீர் கூறி நெஞ்சில் கைகளைக் கட்டிக் கொண்டதும் ஸனா ஓதவேண்டும்.
நபி صلى الله عليه وسلم அவர்கள் தொழுகைக்காக தக்பீர் கூறினால் குர்ஆன் வசனங்களை ஓதுவதற்கு முன்பு சிறிது நேரம் மவுனமாக இருப்பார்கள். “இறைத்தூதரே! என் தாயும், தந்தையும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! தக்பீருக்கும் கிராஅத்துக்கும் இடையே தாங்கள் என்ன ஓதுகிறீர்கள்?” என நான் கேட்டேன். அதற்கு,
اللَّهُمَّ بَاعِدْ بَيْنِيْ وَبَيْنَ خَطَايَاىَ كَمَا بَاعَدتَّ بَيْنَ اْلَمشْرِقِ وَالْمَغْرِبِ اللَّهُمَّ نَقَّنِيْ مِنَ الْخَطَاياَ كَمَا يُنَقَّى اثَّوْبُ الأبْيَضُ مِن الدَّنَسِ اللَّهُمَّ اغْسِلْ خَطَايَاىَ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ
ஸனாவின் பொருள்: இறைவா! கிழக்குக்கும் மேற்குக்கும் இடையை வெகு தூரத்தை நீ ஏற்படுத்தியதைப் போல எனக்கும் என் தவறுகளுக்குமிடையே நீ தூரத்தை ஏற்படுத்துவாயாக!
இறைவா! வெண்மையான ஆடை அழுக்கிலிருந்து தூய்மைப்படுத்தப்படுவது போல என்னை என் தவறுகளிலிருந்து தூய்மைப்படுத்துவாயாக!
இறைவா! தண்ணீராலும் பனிக்கட்டியாலும் ஆலங்கட்டியாலும் என் தவறுகளைக் கழுவி விடுவாயாக!
தக்பீர் கட்டியதும் கீழ்காணும் இந்த வாசகங்களையும் கூறலாம்.
நபி صلى الله عليه وسلم அவர்கள் தொழும் போது அல்லாஹு அக்பர் என தக்பீர் கூறியதும்,
பொருள்: இணைவைத்தவர்களில் ஒருவனாக நான் இல்லாமலும், கட்டுப்பட்ட முஸ்லிமாகவும் வானங்களையும் பூமியையும் படைத்தவனை நோக்கி என் முகத்தைத் திருப்புகிறேன். என் தொழுகையும் என் இதர வணக்கங்களுக்கும் என் வாழ்வும் என் மரணமும் அகில உலகையும் படைத்து இரட்சிக்கும் இறைவனுக்கே உரியன. அவனுக்கு நிகராக எவருமில்லை. இவ்வாறு தான் ஏவப்பட்டுள்ளேன். கட்டுப்பட்டு நடப்பவர்களில் நானும் ஒருவன் இறைவனே! நீயே அதிபதி. உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு எவருமில்லை. நீ தூய்மையானவன். நீ புகழுக்குரியவன்.
அறிவிப்பவர் அலி رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்:முஸ்லிம்
நபி வழியில் நம் தொழுகை
தொழுகையின் ஆரம்பத்தில் மட்டும் அவூது ஓதுதல்
ஸனா ஓதி முடித்தபின் “அவூது பில்லாஹி மினஷ்ஷைத்தானிர் ரஜீம்” என்று ஆரம்பித்து “பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்” எனக் கூறி சூரத்துல் பாத்திஹாவை ஓதவேண்டும்.
“(நபியே) நீர் குர்ஆனை ஓதுவீராயின் (முன்னதாக) விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் இறைவனிடம் காவல் தேடுவீராக!” (அல்குர்ஆன் 16:98)
اَعُوْذُ بِاللهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ
பொருள்: எடுத்தெறியப்பட்ட ஷைத்தானின் தீங்கை விட்டும் இறைவனிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
முதல் ரக்அத்தில் மட்டும்தான் “அவூது பில்லாஹி மினஷ்ஷைத்தானிர் ரஜீம்” கூறவேண்டும். மற்ற ரக்அத்களில் இதனை ஓதுவதற்கு ஆதாரம் இல்லை.
“நபி صلى الله عليه وسلم அவர்கள் இரண்டாம் ரக்அத்துக்கு எழுந்ததும் அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்” என்று ஓதத் தொடங்கி விடுவார்கள். (முதல் ரக்அத்தில் சிறிது நேரம் மவுனமாக இருந்தது போல் இரண்டாம் ரக்அத்தில்) மவுனமாக இருக்கமாட்டார்கள்” (அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: நஸயீ, முஸ்லிம்
ஒவ்வொரு ரக்அத்திலும் சூராக்களை ஆரம்பிக்கும்போது بسم الله الرحمن الرحيم “பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்” என கூற வேண்டும்.
பொருள்: அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்) அடுத்து பிஸ்மியை தொடர்ந்து சூரத்துல் பாத்திஹா ஓதவேண்டும்.
சூரத்துல் ஃபாத்திஹா
“சூரத்துல் ஃபாத்திஹா ஓதாதவருக்கு தொழுகையில்லை” என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: உபாதா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: நஸயீ, திர்மிதீ
الْحَمْدُ للّهِ رَبِّ الْعَالَمِينَ الرَّحْمـنِ الرَّحِيمِ مَالِكِ يَوْمِ الدِّينِ إِيَّاكَ نَعْبُدُ وإِيَّاكَ نَسْتَعِينُ اهدِنَــــا الصِّرَاطَ المُستَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنعَمتَ عَلَيهِمْ غَيرِ المَغضُوبِ عَلَيهِمْ وَلاَ الضَّالِّينَ
பொருள்:1. சர்வ புகழும் அல்லாஹ்வுக்கே சர்வ உலகங்களையும் (படைத்து) பரிபாலித்து இரட்சிப்பவன் 2. அளவற்ற அருவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன். 3.தீர்ப்பு நாளின் எஜமானன். 4. உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; இன்னும் உன்னிடமே நாங்கள் உதவி தேடுகிறோம். 5. நீ எங்களை நேரான வழியில் நடத்துவாயாக. 6. நீ எவர்களின் மீது அருள் புரிந்தாயோ அவர்கள் (சென்ற) வழி(யில் நடத்துவாயாக!) 7.(உனது) கோபத்திற்குள்ளானவர்களும் வழி தவறியவர்களும் சென்ற வழியல்ல.
இமாமைப் பின்பற்றித் தொழுபவர் இமாம் சப்தமிட்டு ஓதக்கூடிய ரக்அத்துகளில் எதனையும் ஓதாமல் இமாம் ஓதுவதைத் கேட்கவேண்டும். இமாம் சப்தமிட்டு ஓதாத ரக்அத்துகளில் அவரும் ஓதியாக வேண்டும்.
“குர்ஆன் ஓதப்பட்டால் அதைச் செவி தாழ்த்திக் கேளுங்கள். மவுனமாக இருங்கள்” என இறைவன் கூறியுள்ளான். (அல்குர்ஆன் 7:204)
“இமாம் ஏற்படுத்தப்பட்டிருப்பது பின்பற்றப்படுவதற்கே! அவர் தக்பீர் கூறும்பொழுது நீங்களும் தக்பீர் கூறுங்கள்! அவர் ஓதும்போது நீங்கள் மவுனமாக இருங்கள்” என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். நூல்: முஸ்லிம்
சூரத்துல் ஃபாத்திஹா ஓதி முடிந்ததும் “ஆமீன்” கூற வேண்டும். சப்தமிட்டு ஓதும் தொழுகைகளில் இமாம் ஃசூரத்துல் ஃபாத்திஹாவை ஓதி முடித்ததும் இமாமும் (தொழவைப்பவரும்) மஃமூமும் (பின் நின்று தொழுபவரும்) சப்தமிட்டு ஆமீன் கூற வேண்டும்.
“நபி صلى الله عليه وسلم அவர்கள் வலழ்ழாள்ளீன் என்று கூறியதும் முதல் வரிசைக்கு கேட்குமளவிற்கு ஆமீன் கூறுவார்கள்” அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: அபூதாவூத், இப்னு மாஜா
“இமாம் கைரில் மக்லூபி அலைஹிம் வலழ்ழாள்ளீன்” எனக்கூறும்போது நீங்கள் ஆமீன் கூறுங்கள்! ஏனெனில் எவர் கூறும் ஆமீன் மலக்குகள் கூறும் ஆமீனுடன் ஒத்து அமைந்து விடுகிறதோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன” என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்
இந்தப் பள்ளிவாசலில் (சுமார்) 200 நபித்தோழர்களைக் கண்டுள்ளேன். (அவர்கள்) இமாம் “கைரில் மக்லூபி அலைஹிம் வலழ்ழாள்ளீன்” எனக் கூறும்போது “ஆமீன்” என்ற பெரும் சப்தத்தை நான் கேட்டுள்ளேன். அறிவிப்பவர்: அதா நூல்: பைஹகீ
இந்த ஹதீஸை கவனித்தால் ஆமீன் சப்தமிட்டே கூறவேண்டுமென அறியலாம்.
ஸூரத்துல் ஃபாத்திஹாவுக்குப் பின் வேறு வசனங்களை ஓதும் முறை
ஸூரத்துல் ஃபாத்திஹாவை ஓதி முடித்தபின் குர்ஆனில் வேறு வசனங்களையோ, அத்தியாயங்களையோ ஓதவேண்டும். நபி صلى الله عليه وسلم அவர்கள் லுஹரின் முதலிரண்டு ரக்அத்துகளில் ஸூரத்துல் ஃபாத்திஹாவையும் வேறு இரு ஸூராக்களையும் ஓதுவார்கள். ஆறிவிப்பவர்: அபூகதாதா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்
முதலிரண்டு ரக்அத்துகளைப் பொறுத்தவரை எல்லா நேரங்களிலும் ஸூரத்துல் ஃபாத்திஹாவுடன் வேறு வசனங்களை நபி صلى الله عليه وسلم அவர்கள் ஓதியுள்ளனர். ஆனால் மூன்றாம் நான்காம் ரக்அத்களில் ஸூரத்துல் ஃபாத்திஹாவை ஓதியிருக்கிறார்கள். சில சமயங்களில் ஸூரத்துல் பாத்திஹாவுடன் வேறு வசனங்களையும் ஓதியிருக்கிறார்கள். எனவே முதலிரண்டு ரக்அத்களில் ஸூரத்துல் ஃபாத்திஹாவுடன் வேறு வசனங்களை ஓதவேண்டும். மற்ற இரண்டு ரக்அத்களில் ஃஸூரத்துல் பாத்திஹாவை மட்டும் ஓதலாம். அல்லது வேறு வசனங்களையும் ஓதலாம்.
நபி صلى الله عليه وسلم அவர்கள் லுஹரின் முதலிரண்டு ரக்அத்களில் முப்பது ஆயத்துகள் அளவு ஓதுவார்கள். பின்னிரண்டு ரக்அத்களில் பதினைந்து ஆயத்துக்கள் அளவு ஓதுவார்கள். அறிவிப்பவர்: அபூஸயீதுல்குத்ரீ (ரலி) நூல்கள்: அஹ்மத், முஸ்லிம்
முழு அத்தியாயமாக ஓதுதல்
முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்கள் மிகப் பெரும் ஸுராக்கைைள ஒதித் தொழுவித்து மக்களுக்குக் கஷ்டம் கொடுப்பதை நபி صلى الله عليه وسلم அவர்களிடம் முறையிட்டபோது “முஆதே! நீ குழப்பத்தை ஏற்படுத்துகிறாயா? ஸப்பிஹிஸ்ம ரப்பிகல் அஃலா, வஷ்ஷம்ஸிவலுஹாஹா வல்லைலி இதாயக்ஷா ஆகியவற்றை ஓதியிருக்கலாகாதா? என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் வினவினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்
ஆங்காங்கே சில வசனங்கள் ஓதுதல்
குர் ஆனின் முழு அத்தியாயம் இல்லாமல் அதிலுள்ள சில வசனங்களை மட்டும் ஓதலாம்.
நபி صلى الله عليه وسلم அவர்கள் ஃபஜ்ருடைய இரண்டு ரக் அத்களில் முதல் ரக்அத்தில் பகரா அத்தியாயத்தில் உள்ள கூலூ ஆமின்னா பில்லாஹி (2:136) என்ற வசனத்தையும் இரண்டாம் ரக்அத்தில் “ஆமன்னா பில்லாஹி வஷ்ஹத் பிஅன்னா முஸ்லிமூன்”(3:52) என்ற வசனத்தையும் ஓதினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: முஸ்லிம், அஹ்மத்
ஒரே அத்தியாயத்தை திரும்பத் திரும்ப ஓதுதல்
நபி صلى الله عليه وسلم அவர்கள் ஸுப்ஹுத் தொழுகையில் இரண்டு ரக்அத்களிலும் இதா ஸுல்ஸிலதில் அர்ளு என்பதையே ஓதினார்கள். நூல்: அபூதாவூத்
ஒரே அத்தியாயத்தை பகுதி பகுதியாக இரண்டு ரக்அத்களில் ஓதுதல்
நபி صلى الله عليه وسلم அவர்கள் அஃசராப் ஸூராவை மஃரிபின் இரண்டு ரக்அத்களிலும் பகுதி பகுதியாக ஓதினார்கள். அறிவிப்பவர்: ஆயிஸா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: நஸயீ
அத்தியாயங்களை வரிசை தவறி ஓதுதல்
நபி صلى الله عليه وسلم அவர்களுடன் நான் ஒரு நாள் இரவில் தொழுதேன். முதலில் பகரா ஓதி பின்னர் நிஸா ஓதி பின்னர் ஆல இம்ரான் ஓதினார்கள். அறிவிப்பவர்: ஹுதைபா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: முஸ்லிம், அஹ்மத், நஸயீ
இரண்டாம் ரக்அத்தைவிட முதல் ரக்அத்தில் அதிக அளவு ஓதுதல்
நபி صلى الله عليه وسلم அவர்கள் இரண்டாம் ரக்அத்தை முதல் ரக்அத்தை நீட்டுவார்கள். அறிவிப்பவர்: அபூகதாதா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்
ருகூவு செய்தல்
சூரத்துல் ஃபாத்திஹா மற்றும் வேறு வசனங்களை ஓதி முடித்தபின் ருகூவு செய்யவேண்டும்.
ருகூவு செய்யும்போது கைகளை உயர்த்த வேண்டும்
நபி صلى الله عليه وسلم அவர்கள் தொழுகைக்காக நிற்கும்போது தனது இரு தோள் புஜங்கள்வரை இரு கைகளையும் உயர்த்துவார்கள். ருகூவுக்கு தக்பீர் கூறும்போது இதே போல் செய்வார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, இப்னு மாஜா
நாங்கள் எங்கள் கைகளை (ருகூவின் போது) முழங்கால்கள் மீது வைக்குமாறு கட்டளையிடப்பட்டிருந்தோம். அறிவிப்பவர்: முஸ்அப் இப்னு ஸஃது رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரி
நபி صلى الله عليه وسلم அவர்கள் ருகூவுச் செய்யும்போது தம் இரு கைகளால் தமது இரு முழங்கால்களையும் பிடித்துக் கொள்வது போல் வைத்தார்கள். தனது இரு கைகளையும் நாண் போல் தனது விலாப்புறங்களை விட்டு அகற்றி வைத்தார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: திர்மிதீ, அபூதாவூத்
முதுகை சமமாக வைக்கவேண்டும்
நபி صلى الله عليه وسلم அவர்கள் ருகூவுச் செய்யும்போது தம் தலையைத் தாழ்த்தவும் மாட்டார்கள்; உயர்த்தவும் மாட்டார்கள். மாறாக இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட விதமாக வைப்பார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: முஸ்லிம், இப்னு மாஜா
ருகூவையும் சுஜூதையும் பூரணமாகச் செய்யவேண்டும்
திருடர்களில் மிகவும் மோசமான திருடன் தொழுகையில் திருடுபவன் என்று நபி صلى الله عليه وسلمஅவர்கள் கூறியபோது, இறைவனின் தூதரே! தொழுகையில் எப்படி ஒருவன் திருடுவான்? என நபித்தோழர்கள் கேட்டனர். “தனது ருகூவையும் சுஜூதையும் பூரணமாகச் செய்யாதவனே அந்தத் திருடன்” என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அபூகதாதா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்:அஹ்மத்
தொழுகையில் கோழி கொத்துவதைப் போல் (அவசரமாகக்) குனிந்து நிமிர்வதை நபி صلى الله عليه وسلم அவர்கள் தடுத்தார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: அஹ்மத்
ருகூவின் போது ஓத வேண்டியவை
நபி صلى الله عليه وسلم அவர்கள் தமது ருகூவில் “சுப்ஹான ரப்பியல் அழீம்” என்றும் தமது ஸஜ்தாவில் “ஸுப்ஹான ரப்பியல் அஃலா” என்றும் ஓதுவார்கள். அறிவிப்பவர்: ஹுதைபாرَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: அஹ்மத், அபூதாவூத், நஸயீ
سُبْحَانَ رَبَّيَ الْعَظِيمِ “சுப்ஹான ரப்பியல் அழீம்”
பொருள்: மகத்துவமிக்க என் இரட்சகன் பரிசுத்தமானவன்.
سُبْحاَنَكَ اَللَّهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ اَللَّهُمَّ اغْفِرْ لِيْ
ஸுப்ஹானகல்லாஹும்ம ரப்பனா வபிஹம்திக அல்லாஹும்ம மஃக்பிர்லீ
பொருள்: எங்கள் இரட்சகனே! உன்னுடைய புகழால் நீ தூய்மையானவன், இறைவா! எனக்கு மன்னிப்பருள்வாயாக.
سُبُّوحٌ قُدُّوْسٌ رَبُّ الْمَلاَءِكَةِ وَالرُّوْحِ
“ஸுப்புஹுன் குத்தூஸுன் ரப்புல் மலாயிகதி வர்ரூஹ்” என்றும் ருகூவில் நபி صلى الله عليه وسلم ஓதுவார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: அஹ்மத், முஸ்லிம், அபூதாவூத், நஸயீ
பொருள்: வானவர்களுக்கும், ஜிப்ரீலுக்கும் ஜிப்ரீலுக்கும் எஜமானனாகிய இறைவன் மிகத் தூய்மையானவன், பரிசுத்தமானவன்.
ருகூவிலிருந்து எழுதல்
ருகூவிலிருந்து எழும்போது தனது இரண்டு கைகளையும் உயர்த்தி “ஸமிஅல்லாஹூ லிமன் ஹமிதா” என்று கூற வேண்டும்
سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ
பொருள்: புகழ்பவரின் புகழ் வார்த்தைகளை இறைவன் கேட்கிறான்.
ருகூவிலிருந்து நிலைக்கு வந்ததும்
பின்னால் உள்ள எதையேனும் ஒன்றை கூறலாம்.
رَبَّنَا لَكَ الْحَمْدُ ரப்பனா லகல் ஹம்து
رَبَّنَا وَ لَكَ الْحَمْدُ ரப்பனா வலகல் ஹம்து
اللَّهُمَّ رَبَّنَا وَ لَكَ الْحَمْدُ அல்லஹும்ம ரப்பனா வலகல் ஹம்து (புகாரி)
பொருள்: இறைவா உனக்கே புகழனைத்தும்
اَللَّهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ مِلْئَ السَّمَوَاتِ ومِلْئَ اَلآرْضِ ومِلْئَ مَاشِئْتَ مِنْ شَيْئٍ بَعْدُ
அல்லஹும்ம ரப்பனா லகல் ஹம்து மில் அஸ்ஸமாவாத்தி வமில் அல் அர்ழி, வமில்அ மாஷிஃத மின்ஷையின் பஃது (நூல்: முஸ்லிம்)
பொருள்: இறைவா! பரக்கத்தும் தூய்மையும் நிறைந்த ஏராளமான புகழ் உனக்கேயுரியது.
ஸஜ்தா செய்யும் முறை
ஸஜ்தாவுக்காக நபி صلى الله عليه وسلم குனியும்போது அல்லாஹ் அக்பர் என்று கூறுவார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைராرَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரி
“இரு பாதங்கள், இரு முட்டுக்கால்கள், இரு கைகள், நெற்றி ஆகிய ஏழு உறுப்புகள் தரையில் படுமாறு சஜ்தாச் செய்யும்படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்” என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறிய சமயம் நெற்றையைக் குறிப்பிடும்போது தமது கையை மூக்கின் மீது வைத்து சுட்டிக் காட்டினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ புகாரி, முஸ்லிம்
முதலாவதாக கையை தரையில் வைத்தல்
“உங்களில் ஒருவர் சஜ்தாச் செய்யும்போது ஒட்டகம் அமர்வது போல் அமர வேண்டாம். தனது முட்டுக் கால்களை வைப்பதற்கு முன் தனது கைகளை வைக்கட்டும்” என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: நஸயீ
கால் விரல்களை கிப்லாவை முன்னோக்கி வைத்தல்
நபி صلى الله عليه وسلم அவர்கள் தொழுகையில் ஸுஜுது செய்யும்போது தங்கள் கால் விரல்களை கிப்லாவை முன்னோக்கி வைப்பார்கள். அறிவிப்பவர்: அபூஹுமைது அஸ்ஸாயிதி رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: நஸயீ
முழங்கையை உயர்த்திக் கொள்ளல்
“நீ ஸஜ்தா செய்யும்போது உனது உள்ளங்கைகளை (தரையில்) வைத்து முழங்கைகளை உயர்த்திக்கொள்” என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: பராஃபின் ஆஸிப் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: முஸ்லிம்
தொடையுடன் வயிற்றை சேர்க்கக் கூடாது
நபி صلى الله عليه وسلم அவர்கள் சஜ்தா செய்யும்போது தமது தொடைகளின் மீது வயிற்றைத் தாங்கிக் கொள்ளாமலும் தமது இரு தொடைகளையும் விரித்தவர்களாகவும் சஜ்தா செய்வார்கள். அறிவிப்பவர்: அபூஹுமைது அஸ்ஸாயிதி رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: அஹ்மத்
கைவிரல்களை நடுநிலையாக வைத்தல்
கைவிரல்களை முழுமையாக விரிக்காமலும், முற்றிலுமாக மூடிவிடாமலும் இரண்டிற்கும் இடைப்பட்ட முறையில் வைக்கவேண்டும்
ஸஜ்தாவில் நடுநிலையை மேற்கொள்ளுங்கள்! தமது கைகளை நாய் விரிப்பதுபோல் உங்களில் எவரும் விரிக்கலாகது என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், நஸயீ, திர்மிதீ, இப்னு மாஜா
ருகூவையும், ஸஜ்தாவையும் பூரணமாகச் செய்தல்
ருகூவையும், ஸஜ்தாவையும் பூரணமாகச் செய்யாத ஒருவரை நபி صلى الله عليه وسلم கண்டபோது, “முஸ்லிம்களே எவர் ருகூவிலும் ஸஜ்தாவிலும் தம் முதுகத் தண்டை நிலைப்படுத்தவில்லையோ அவருக்குத் தொழுகை இல்லை” என்றார்கள். அறிவிப்பவர்: அலீ இப்னு ஷைபான் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: அஹ்மத், இப்னு மாஜா
ஸஜ்தாவின் போது கூறவேண்டியவை
நபி صلى الله عليه وسلم அவர்கள் சஜ்தாவின் போது
سُبْحَانَ رَبَّيَ الأَعْلَى
“ஸுப்ஹான ரப்பியல் அஃலா” என்று ஓதுவார்கள்.
பொருள்: உயர்வுமிக்க என் இறைவன் தூயவன். அறிவிப்பவர்: ஹுதைபா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், நஸயீ,
நபி صلى الله عليه وسلم அவர்கள் தமது ருகூவிலும், சுஜுதிலும்
سُبُّوحٌ قُدُّوْسٌ رَبُّ الْمَلاَءِكَةِ وَالرُّوْحِ
“ஸுப்புஹுன் குத்துஸுன் ரப்புல் மலாயிகதி வர்ரூஹ்” என்று கூறுவார்கள்.
பொருள்: வானவர்களுக்கும், ஜிப்ரீலுக்கும் இறைவன் தூய்மையானவன், பரிசுத்தமானவன். அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், நஸயீ,
سُبْحاَنَكَ اَللَّهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ اَللَّهُمَّ اغْفِرْ لِيْ
ஸுப்ஹானகல்லாஹும்ம ரப்பனா வபிஹம்திக்க அல்லாஹும்மஃக்பிர்லீ என்று நபி صلى الله عليه وسلم ஓதுவார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம்
இரண்டு சஜ்தாக்களுக்கிடையே ஓத வேண்டியவை
رَبِّ اغْفِرْ لِيْ رَبِّ اغْفِرْ لِيْ
நபி صلى الله عليه وسلم அவர்கள் இரண்டு சஜ்தாக்களுக்கிடையே ரப்பிக் ஃபிர்லீ ரப்பிக் ஃபிர்லீ” என்று கூறுவார்கள். அறிவிப்பவர்: ஹுதைபா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: திர்மிதீ, நஸயீ, இப்னு மாஜா, அபூதாவூத்
பொருள்:இறைவா! என்னை மன்னிப்பாயாக! இறைவா! என்னை மன்னிப்பாயாக!
நபி صلى الله عليه وسلم இரண்டு சஜ்தாக்களுக்கிடையே
اَللَّهُمَّ اغْفِرْلِيْ وَارْحَمْنِيْ وَعَافِنِيْ وَاهْدِنِيْ وَارْزُقْنِيْ
“அல்லாஹும்மஃக்பிர்லீ வர்ஹம்னீ வஆஃபினி வஹ்தினீ வர்ஜுக்னீ” என்று ஓதுவார்கள்.
பொருள்: இறைவா! என்னை மன்னிப்பாயாக! எனக்கு அருள் புரிவாயாக! எனக்கு நிவாரணமளிப்பாயாக! எனக்கு வழி காட்டுவாயாக! எனக்கு தேவையானவற்றை வழங்குவாயாக! அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்:திர்மிதீ
ஒற்றை ரக்அத்களிலிருந்து எழும்போது அமர்ந்துவிட்டு கைகளை ஊன்றி எழவேண்டும்
“நபி صلى الله عليه وسلم அவர்கள் ஒற்றையான ரக்அத்களை நிறைவேற்றிவிட்டு எழும்போது உட்காராமல் நிலைக்கு வரமாட்டார்கள்” அறிவிப்பவர்: மாலிக் பின்அல் ஹூவைரிஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, திர்மிதீ
இரண்டாம் ரக்அத்
நபி صلى الله عليه وسلم அவர்கள் இரண்டாம் ரக்அத்துக்கு எழுந்ததும் “அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்” என்று ஓதத் துவங்கி விடுவார்கள். மவுனமாக இருக்க மாட்டார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ முஸ்லிம், நஸயீ
இரண்டாம் ரக்அத்தில் அமரும் முறை
நபி صلى الله عليه وسلم அவர்கள் இரண்டாம் ரக்அத்தில் அமரும்போது இடது கால் மீது அமர்ந்து வலது காலை நாட்டி வைத்துக்கொண்டார்கள். கடைசி இருப்பின்போது இடது காலை வெளிப்படுத்தி வலது காலை நாட்டி வைத்து தமது இருப்பிடம் தரையில் படுமாறு அமர்ந்தார்கள். அறிவிப்பவர்: அபூஹுமைத் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரி
அத்தஹிய்யாத் இருப்பு முறை
நபி صلى الله عليه وسلم அவர்கள் இரண்டாம் ரக்அத்தில் அமரும் போது இடது கால் மீது அமர்ந்து வலது காலை நாட்டி வைத்துக் கொண்டார்கள். கடைசி இருப்பின் போது இடது காலை வெளிப்படுத்தி வலது காலை நாட்டி வைத்து தமது இருப்பிடம் தரையில் படுமாறு அமர்ந்தார்கள். அறிவிப்பவர்: அபூஹுமைத் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரி
நபி صلى الله عليه وسلم அவர்கள் தஷஹ்ஹுதில் அமரும்போது தமது வலது கையைத் தமது வலது தொடைமீதும், இடது கையைத் தமது இடது தொடைமீதும் வைத்து ஆட்காட்டி விரலால் இஷாராச் செய்வார்கள். அவர்களின் பார்வை அவர்களின் இஷாராவைக் கடந்து செல்லாது. அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: முஸ்லிம், அஹ்மத், நஸயீ, தாரமி
இருப்பில் ஓதவேண்டியவை
“அத்தஹிய்யா(த்)து லில்லாஹி வஸ்ஸலவா(த்)து வத்தய்யிபா(த்)து அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன்னபிய்யு வரஹ்ம(த்)துல்லாஹி வபரகாதுஹு அஸ்ஸலாமு அலைனா வஅலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன் அஷ்ஹது அ(ன்)ல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு” என தொழுகையில் அமரும்போது நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறச் சொன்னார்கள். அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி,முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், நஸயீ, திர்மிதீ, இப்னு மாஜா
பொருள்: எல்லாவிதமான கண்ணியங்களும் தொழுகைகளும் நல்லறங்களும் இறைவனுக்கே உரியது. நபியே! உம்மீது சாந்தியும் இறைவனின் அருளும் விருத்தியும் உண்டாகட்டுமாக! மேலும், எங்கள் மீதும் ஏனைய நல்லடியார்கள் மீதும் சாந்தி உண்டாகட்டுமாக! வணக்கத்திற்குரியவன் இறைவனைத் தவிர வேறு யாருமில்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன். மேலும், முஹம்மது صلى الله عليه وسلم அவர்கள் இறைவனின் தூதரும் அடியாருமாவார்கள் என்றும் உறுதியாக நம்புகிறேன்.
கடைசி இருப்பில் அமரும் முறை
“எந்த ரக்அத்தில் ஸலாம் கொடுக்க வேண்டுமோ அந்த இருப்பில் (அல்லாஹ்வின் தூதர்) அவர்கள் இடது காலை (வலது காலுக்கு கீழ்) வெளிப்படுத்தி தங்களது அமரும் இடத்தை தரையில் வைத்தும் அமர்ந்தனர்” அறிவிப்பவர்: அபூஹுமைத் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரி
கடைசி இருப்பில் அத்தஹியாத்தை ஓதியவுடன் கீழ்காணும் ஸலவாத்தை ஓதவேண்டும்.
ஸலவாத் ஓதுதல்
اللَّهُمَّ صَلَّ عَلى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهيمَ وَعَلَى آلِ إِبْرَاهيمَ إِنَّك حَميدٌ مَجيدٌ اللَّهُمَّ بَاَرِكْ عَلى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍكَمَا بَارَكْتَ عَلى إِبْرَاهيمَ وَعَلَى آلِ إِبْرَاهيمَ إِنَّك حَميدٌ مَجيدٌ
அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லை(த்)த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்றாஹீம இன்னக ஹமீது(ன்)ம் மஜீத் அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா இப்றாஹீம வஅலா ஆலி இப்றாஹீம இன்னக ஹமீது(ன்)ம் மஜீத். அறிவிப்பவர்: கஅப் பின் உஜ்ரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரி
பொருள்: இறைவா! இப்றாஹீம் (அலை) அவர்கள் மீதும் இப்றாஹீம் (அலை) அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ அருள் புரிந்ததைப் போல், முஹம்மது صلى الله عليه وسلم அவர்களின் மீதும், முஹம்மது صلى الله عليه وسلم வர்களின் குடும்பத்தார்மீதும் நீ அருள்புரிவாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரியவனாகவும், கண்ணியத்திற்குரியவனாகவும் இருக்கிறாய்.
இறைவா இப்றாஹீம் (அலை) அவர்களுக்கும், இப்றாஹீம் (அலை) அவர்களின் குடும்பத்தாருக்கும் நீ விருத்தி செய்ததுபோல் முஹம்மத் صلى الله عليه وسلم அவர்களுக்கும், முஹம்மத் صلى الله عليه وسلم அவர்களின் குடும்பத்தாருக்கும் விருத்தி செய்வாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரிவனாகவும், கண்ணியத்திற் குரியவனாகவும் இருக்கிறாய்.
ஸலவாத்துக்குப் பிறகு ஓத வேண்டியவை
அல்லாஹும்ம இன்னீ அவூது பிக மின் அதாபில் கப்ரி, வஅவூது பிக மின் ஃபித்னதில் மஸீஹித் தஜ்ஜால் வஅவூது பிக மின் ஃபித்னதில் மஹ்யா வல் மமாத் அல்லாஹும்ம இன்னீ அவூது பிக மினல் மஃஸமி வல் மக்ரமி. அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி, நஸயீ, அஹ்மத்
பொருள்: இறைவா! கப்ருடைய வேதனையை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்பு தேடுகிறேன். தஜ்ஜால் என்பவனின் குழப்பத்தை விட்டும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன். வாழ்வு, மரணம் ஆகியவற்றின் சோதனைகளை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். இறைவா! பாவங்கள் புரிவதை விட்டும், கடன் தொல்லையை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்.
“அல்லாஹும்ம இன்னீ ளலம்து நஃப்ஸீ ளுல்மன் கஸீரன் வலா யக்ஃபிருத் துனூப இல்லா அந்த ஃபக்ஃபிர்லீ மக்ஃபிர(த்)தன் மின் இந்திக வர்ஹம்னீ இன்னக அந்தல் கஃபூருர் ரஹீம்” என்ற துஆவை நான் தொழுகையில் ஓதுவதற்காக நபி صلى الله عليه وسلم அவர்கள் கற்றுத் தந்தார்கள். அறிவிப்பவர்: அபூபக்கர் رَضِيَ اللَّهُ عَنْهُநூல்கள்: புகாரி, முஸ்லிம்
பொருள்: இறைவா! எனக்கே நான் அதிஅளவு அநீதி இழைத்துக் கொண்டேன். பாவங்களை உன்னைத்தவிர வேறு எவரும் மன்னிக்க முடியாது. எனவே, என்னை மன்னிப்பாயாக! மேலும், எனக்கு அருள் புரிவாயாக! நிச்சயமாக நீ பாவங்களை மன்னிப்பவனும் நிகரில்லா அன்புடையோனுமாய் இருக்கிறாய்.
அத்தஹிய்யாத், ஸலவாத், துஆக்கள் ஓதிய பிறகு “அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்” என்று கூறி தொழுகையை முழுமைப்படுத்திட வேண்டும்.
السَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ
“தொழுகயின் திறவு (உளூ எனும்) தூய்மையாகும். (உலகத் தொடர்புகளை) தடை செய்வது தக்பீர் கூறுவதாகும். அதிலிருந்து விடுபடுவது தஸ்லீம் ஆகும்” என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: அபூதாவூத், திர்மிதீ, இப்னு மாஜா
ஸலாமு கூறி முகத்தை வலப்புறமும், இடப்புறமும் நன்கு திருப்ப வேண்டும். தன் கன்னத்தின் பகுதியை பின்னால் உள்ளவர்கள் பார்க்குமளவுக்கு திருப்ப வேண்டும்.
நபி صلى الله عليه وسلم அவர்கள் தமது வலப்பக்கம் (உள்ளவர்களால்) தம் கன்னத்தின் வெண்மை பார்க்கப்படும் அளவுக்கு தமது இடப்பக்கம் (உள்ளவர்களால்) தம் கன்னத்தின் வெண்மை பார்க்கப்படும் அளவுக்கு சலாம் கூறியதை நான் கண்டேன். அறிவிப்பவர்: ஸஅது رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: முஸ்லிம், நஸயீ
நபி வழியில் நம் தொழுகை அமைவதற்கு இதுதான் முறையாகும்.
முந்தைய பதிவை படிக்க : காற்றுள்ள போதே தூற்றிக்கொள்
5