பொருளடக்கம்
Welcome Ramadan – ரமலானை வரவேற்போம்
பொதுவாக அனைத்து முஸ்லிம்களின் எண்ணமும் எதிர்வரும் ரமலானிலாவது அதிகமான வணக்க வழிபாடுகளை செய்ய வேண்டும், பாவமன்னிப்பு பெறவேண்டும், இந்த ரமலானிலிருந்து நல்ல மாற்றத்தை நமது வாழ்க்கையில் கொண்டுவர வேண்டும், அதிகமாக குர்ஆனை ஓத வேண்டும், இரவு நேர வணக்க வழிபாடுகளில் ஈடுபட வேண்டும், என்பன போன்ற பலவிதமான ஆர்வங்களோடு தான் ஒவ்வொரு ரமலானையும் Welcome Ramadan என்று வரவேற்கின்றோம்.
ஆனால், 100 க்கு 75 சதவிகிதத்தினரின் உள்ளத்தில் ரமலான் நெருங்குகின்ற சமயத்தில் இருந்த ஆர்வம் ரமலான் முடியும் தருவாயில் மாரிப்போய் இருக்கும்.
எந்த அளவுக்கு என்று சொன்னால், இந்த ரமலானை இழந்துவிட்டோம், இன்ஷா அல்லாஹ் அடுத்த ரமலானிலாவது முழுமையான வணக்க வழிபாடுகளில் கவனம் செழுத்த வேண்டும் என்று சங்கடப்படுவதுண்டு.
பலர் 40க்கும் மேற்பட்ட வருட வாழ்க்கையில் இதே நிலையை ஒவ்வொரு ஆண்டும் கடந்து போகக்கூடிய நிலையையும் பார்க்கின்றோம்.
ஒரு சிலர் முழுமையாக வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தாலும் முழு திருப்தி அடையாத நிலையையும் பார்க்கின்றோம். இது ஈமானின் கொள்கை பிடிப்பில் தோன்றுவது.
ஒருசிலர் ரமலானின் ஆரம்ப நாட்களில் கடமையான வழிபாடுகள் அல்லாது பல்வேறு வணக்கங்களிலும் ஈடுபடுவார்கள். இன்னும் ஏதேனும் செய்ய முடியுமா என தேடுவார்கள்.
ஆனால் அவர்களின் ரமலானின் இருதி நாட்கள் ஃபர்ளான வணக்க வழிபாடுகளை கூட சரிவர நிறைவேற்றாத நிலையில் இருப்பதையும் பார்க்கின்றோம்.
ஒருசிலர் முதல் இரண்டு நாட்களில் 3 ஜூஸ்வு குர்ஆனை ஓதி முடிப்பார்கள். ஆனால் அந்த 3 ஜூஸ்வுக்களை தாண்டி முழுமையாக ஓதி முடிப்பவர்கள் மிக மிகக் குறைவு.
ரமலானின் முதல் நாளில் இரவுத் தொழுகைக்கு கூடக் கூடிய கூட்டம் 5 அல்லது 6வது நோன்பிலேயே காணாமல் போய் விடுவதையும் பார்க்கிறோம்.
இவற்றையெல்லாம் முழுமையாக மாற்ற முடியாவிட்டாலும் ஒரு சிலரையாவது வென்றெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இக்கட்டுரை.
அனைவருக்கும் ஒரே விதமான சோதனைகள் அமைவதில்லை.
ஊதாரிக்கு தர்மம் சோதனை அல்ல. ஊதாரித்தனம் தான் சோதனை.
கஞ்சத்தனம் உடையவர்களுக்கு தர்மம் தான் சோதனை.
கோபக்காரருக்கு அவரின் கோபம் தான் சோதனை.
இப்படி விதவிதமான சோதனைகள் ஒவ்வொரு விதமான மனிதர்களுக்கும் மாற்றி மாற்றி கொடுக்கப்படுகிறது.
- வணக்கம் பல்வகைமை கொண்டது. அதற்கு ஏற்ப தான் நாம் நம்மை அடையாளம் கண்டுகொள்ள முடியும்.
- அல்லாஹ் சில வணக்கத்தை இலகுவாக்கி இருப்பான் சில வணக்கத்தை கடினமானதாக ஆக்கி இருப்பான். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று கடினமாக தோன்றும். நமக்கு எது கடினமாக உள்ளதோ அவைகளில் போராடி வெல்ல வேண்டும்.
- போராடி தோற்றுவிட்டால் தோல்வியைக் கண்டு துவண்டு விடாமல் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும்.
- ஆர்வத்தை நிர்வகிக்க வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் அமல்களில் மிகச் சிறந்தது, குறைவான அமல்களாக இருந்தாலும் அந்த அமல்களை தொடர்ந்து செய்வது என்று சொன்னார்கள்.
அப்படிப்பட்ட நல்லமல்களை வரக்கூடிய ரமலானில் குறைவாக செய்தாலும் ரமலான் முடிந்தும் அதை நிறைவாக தொடர்ந்து செய்ய வேண்டும்.
ரமலான் மாதத்தின் சிறப்பு
அல்லாஹ் இந்த உலகில் அவன் விரும்பியதை படைத்துள்ளான். அவனுடைய படைப்புகளில் அவன் எதை வேண்டுமானாலும் தேர்வு செய்து ஒன்றைவிட ஒன்றை அவன் சிறப்பிக்கின்றான்.
அவனுடைய தூதுப் பணிக்கு மனிதர்களில் இறைத்தூதர்களை தேர்வு செய்தான். இறைத்தூதர்களில் சிலரைவிட சிலரை அவன் சிறப்பித்துள்ளான். வானவர்களிலும் ஜிப்ரீல் மீக்காயீல் ஆகிய வானவர்களுக்கு தனிச் சிறப்பு வழங்கியுள்ளான்.
பொதுவாக இடங்கள் அனைத்தும் அல்லாஹ்வின் படைப்பு என்றாலும் அவற்றில் மக்கா மதீனா பைத்துல் முகத்தஸ் ஆகிய இடங்களை அவன் புனிதப்படுத்தியுள்ளான். இந்த மூன்று புனித ஸ்தலங்களில் ஒன்றை விட மற்றதை சிறப்பித்துள்ளான்.
உமது இறைவன் தான் நாடியதை படைக்கிறான். தேர்வுசெய்கிறான்.
அல்குர்ஆன் (28 : 68)
அர்பஜா என்பவர் கூறுகிறார். நான் உத்பா பின் பர்கதிடம் இருந்தேன். அவர் ரமழானின் சிறப்புகளை சொல்லிக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் நபி (ஸல்) அவர்களின் தோழர் ஒருவர் எங்களிடம் வந்தார். அவர் ரமழானின் சிறப்பம்சங்களை எங்களிடம் சொல்ல ஆரம்பித்தார்.
அவர் சொன்னார் ரமழானில் நரகத்தின் வாயில்கள் மூடப்படுகின்றன. சுவர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றான். பின்பு சொன்னார்கள் அம்மாதத்தில் ஓர் மலக்கு மக்களிடம்
“நன்மைகளை தேடக்கூடிய மக்களே” “இதோ சுபச்செய்தியை ஏற்றுக்கொள்ளுங்கள்” அதிகமாக நன்மைகளை செய்யுங்கள்.
“தீமை செய்வோரே” “உங்கள் தீமைகளை குறைத்துக் கொள்ளுங்கள்” என ரமழான் மாதம் முடியும்வரை சொல்லிக் கொண்டேயிருப்பார்.
என நபி (ஸல்) சொன்னார்கள்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : அஹ்மத், நஸயீ
ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது
ஏறக்குறைய 83 ஆண்டுகள் (29 ஆயிரம் நாட்கள்)
இம்மாதத்தில் உள்ள லைத்துல் கத்ர் எனும் இரவில் செய்யப்படும் வணக்கம் ஆயிரம் மாதங்கள் செய்யும் வணக்கத்தை விடச் சிறந்ததாகும். உதாரணத்திற்கு ஒருவர் ஆயிரம் மாதம் இரண்டு ரக்அத்கள் தொழுது வந்தால் கிடைக்கும் நன்மையை விட இந்த ஒரு இரவில் இரண்டு ரக்அத்கள் தொழுவதற்குக் கூடுதலான நன்மைகள் கிடைக்கும்.
اِنَّاۤ اَنْزَلْنٰهُ فِىْ لَيْلَةِ الْقَدْرِ
நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம்.
(அல்குர்ஆன் : 97:1)
وَمَاۤ اَدْرٰٮكَ مَا لَيْلَةُ الْقَدْرِ
மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது?
(அல்குர்ஆன் : 97:2)
لَيْلَةُ الْقَدْرِ ۙ خَيْرٌ مِّنْ اَلْفِ شَهْرٍ
கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக்க மேலானதாகும்.
(அல்குர்ஆன் : 97:3)
تَنَزَّلُ الْمَلٰٓٮِٕكَةُ وَالرُّوْحُ فِيْهَا بِاِذْنِ رَبِّهِمْ مِّنْ كُلِّ اَمْرٍ ۛۙ
அதில் மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரீலும்) தம் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர்.
(அல்குர்ஆன் : 97:4)
سَلٰمٌ ۛهِىَ حَتّٰى مَطْلَعِ الْفَجْرِ
சாந்தி (நிலவியிருக்கும்); அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும்.
(அல்குர்ஆன் : 97:5)
யார் ரமலான் மாதத்தை அடைந்தும் அவருக்கு மன்னிப்பு வழங்கப்பட வில்லையோ அவர் நரகம் நுழைவார்
(அடுத்த ஆண்டு செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் தவறு)
அபூஹுரைரா (ரலி) அவர்கள்
அறிவிக்கின்றார்கள்:
ஒரு முறை நபி {ஸல்} அவர்கள் சொற்பொழிவு மேடை மீது ஏறும் போது மூன்று முறை ஆமீன் கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் மிம்பரின் மீது ஏறும் போது ஆமீன் என மூன்று முறை கூறினீர்களே என வினவப்பட்டது.
என்னிடம் வானவர் ஜிப்ரயீல் (அலை) வருகை தந்தார். வந்தவர்,
யார் ரமலான் மாதத்தை அடைந்தும் அவருக்கு மன்னிப்பு வழங்கப்பட வில்லையோ அவர் நரகம் நுழைவார்; அல்லாஹ்வின் அருளை விட்டும் அவர் தூரமாகிவிடட்டும் எனக் கூறிவிட்டு, ஆமீன் கூறுங்கள் என்றார். எனவே, நான் முதல் முறை ஆமீன் கூறினேன்.
யார் தன்னுடைய பெற்றோர்களில் இருவரையோ அல்லது ஒருவரையோ பெற்றிருந்தும் அவர்களுக்கு நன்மை செய்யாமல் இறந்து விட்டாரோ அவரும் நரகம் நுழைவார்; அல்லாஹ்வின் அருளை விட்டு அவரும் தூரமாகி விடட்டும் எனக் கூறிவிட்டு, ஆமீன் கூறுங்கள் என்றார். எனவே, நான் இரண்டாவது முறையாக ஆமீன் கூறினேன்.
மேலும், யாரிடம் நபியின் பெயர் கூறப்பட்டும் நபியின் மீது ஸலவாத் சொல்லாத நிலையிலேயே மரணித்து விடுகின்றாரோ அவரும் நரகம் நுழைவார்; அல்லாஹ்வின் அருளை விட்டு அவரும் தூரமாகி விடட்டும் எனக் கூறிவிட்டு, ஆமீன் கூறுங்கள் என்றார். எனவே, நான் மூன்றாவது முறையாக ஆமீன் கூறினேன் என்று பதில் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல்: இப்னு குஸைமா
நோன்பு இறையச்சத்தை ஏற்படுத்தும் என்ற இறைவனின் கூற்று…
இந்த நோன்பை அல்லாஹ் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் சமுதாயத்திற்கு மட்டும் கடமையாக்கவில்லை. மாறாக முன் சென்ற சமுதாயங்களுக்கும் கடமையாக்கி உள்ளான்.
يٰٓـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا كُتِبَ عَلَيْکُمُ الصِّيَامُ کَمَا كُتِبَ عَلَى الَّذِيْنَ مِنْ قَبْلِکُمْ لَعَلَّكُمْ تَتَّقُوْنَۙ
ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம்
(அல்குர்ஆன் : 2:183)
இந்த வசனத்தில், நாம் இறையச்சம் உடையவர்கள் ஆக வேண்டும் என்பதற்காகவே நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது என்று அல்லாஹ் கூறுகின்றான்.
—————————————————————–
இந்த மாதத்தின் சிறப்பிற்கு முக்கியக் காரணம், இந்த மாதத்தில் மனித குலத்தின் நேர்வழியான திருக்குர்ஆன் அருளப்பட்டதால் தான். அல்லாஹ் தன் திருமறையில்…
شَهْرُ رَمَضَانَ الَّذِىْٓ اُنْزِلَ فِيْهِ الْقُرْاٰنُ هُدًى لِّلنَّاسِ وَ بَيِّنٰتٍ مِّنَ الْهُدٰى وَالْفُرْقَانِ
இந்த குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்து காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும்.
ஸுரா அல்பகரா 2:185
—————————————————————–
இஸ்லாம் நிறுவப்பட்டுள்ள ஐந்து தூண்களில் ஒன்று நோன்பு
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்றும், முஹம்மத் அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதியாக நம்புதல், தொழுகையை நிலை நிறுத்துதல், ரமளானில் நோன்பு நோற்றல், ஸகாத் வழங்குதல், ஹஜ் செய்தல் ஆகிய ஐந்து காரியங்கள் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது.
அறிவிப்பவர் : இப்னு உமர்(ரலி)
நூல் : புஹாரி
—————————————————————–
நின்று வணங்கினால் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்…
யார் நம்பிக்கை கொண்டு (நற்கூலியை) எதிர்பார்த்து ரமளான் மாதத்தில் நின்று வணங்குகின்றாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா(ரலி)
நூல் : புஹாரி
ரமலான் மாதத்தில் நோன்பு நோற்றால் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும்
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எவர் நம்பிக்கை கொண்டவராகவும், நன்மையை எதிர்பார்த்தவராகவும் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா(ரலி)
நூல் : புஹாரி
குர்ஆனை ஓதினால் ஒரு எழுத்துக்குப் பத்து நன்மை உண்டு.
அது போன்று ரமளான் மாதத்தில் ஒரு முறையாவது குர்ஆனை முழுமையாக ஓதி முடித்து விட வேண்டும் என்று நாம் போட்டி போடுவோம். ஆனால் ரமளான் முடிந்ததும் இதை ஏறிட்டும் பார்ப்பதில்லை.
அது ஏன்? ரமளான் அல்லாத மற்ற நாட்களிலும் குர்ஆனை ஓதினால் ஒரு எழுத்துக்குப் பத்து நன்மை உண்டு.
அல்லாஹ்வின் அருள் மறையான அல்குர்ஆனிலிருந்து ஓர் எழுத்தை ஓதுபவருக்கு ஒரு நன்மை உண்டு. ஒரு நன்மை பத்து நன்மைகளைப் போன்றதாகும்.
அலிஃப், லாம், மீம் என்பதை ஓர் எழுத்து என்று சொல்ல மாட்டேன். மாறாக அலிஃப் ஓரெழுத்து, லாம் ஓரெழுத்து, மீம் ஓரெழுத்து என்று தான் கூறுவேன்.’ என்றார்கள்.
அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத் (ரலி)
நூல் : திர்மிதி (2910)
சொர்க்கத்தில் புகச்செய்வது அல்லாஹ்வின் மீது கடமையாகிவிட்டது
“அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் நம்பிக்கை கொண்டு, தொழுகையை நிலை நிறுத்தி, ரமளானில் நோன்பும் நோற்ற மனிதரை சொர்க்கத்தில் புகச்செய்வது அல்லாஹ்வின் மீது கடமையாகிவிட்டது; அவர்அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிந்தாலும் சரி; அல்லது அவர் பிறந்த பூமியில் உட்கார்ந்து கொண்டாலும் சரி” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி :2790
ரய்யான் அழைக்கின்றது
ரமளான் மாதம் முழுவதும் இறையச்சத்தோடு, நன்மையை எதிர்பார்த்து நம்முடைய அமல்களையும், வணக்க வழிபாடுகளையும் நோன்பாளிகள் செய்து முடிக்கும் போது நாம் அடைகின்ற பரிசுகளை இறைவன் தந்து தூதரின் மூலமாக அழகானமுறையில் விளக்கித் தருகின்றான்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சொர்க்கத்தில் எட்டுவாசல்கள் உள்ளன. அதில் “ரய்யான்’ என்றழைக்கப்படும் வாசலொன்று உள்ளது. அதில் நோன்பாளிகளைத் தவிர வேறெவரும் நுழைய மாட்டார்கள்.
நூல்: புகாரி 3257
அருள் பொங்கும் மாதத்தை வீணாக்காதீர்கள்!
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவன் ரமளான் மாதத்தை அடைந்து அவனது பாவங்கள் மன்னிக்கப்படாமல் அம்மாதம் கழிந்தால் அவனுடைய மூக்கு மண்ணை கவ்வட்டும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல் : திர்மிதீ:3468 (ஹதீஸ்சுருக்கம்)
நோன்பு அல்லாஹ்வுக்குரியது
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், ‘நோன்பு எனக்குரியது. நானே அதற்குப் பிரதிபலன் வழங்குவேன்.
நோன்பாளி தன் இச்சைகளையும் தன் உணவையும் பானத்தையும் எனக்காகவே விட்டுவிடுகிறார்’ என்று அல்லாஹ் கூறினான்.
நோன்பு ஒரு கேடயமாகும். நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன.
நோன்பு துறக்கும் வேளையில் கிடைக்கிற ஒரு மகிழ்ச்சியும், மறுமையில் தம் இறைவனை அவர் சந்திக்கும் வேளையில் கிடைக்கிற ஒரு மகிழ்ச்சியும் தான் அவை.
நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை கஸ்தூரி வாசனையை விட அல்லாஹ்விடம் மணமிக்கதாகும்.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரரா(ரலி). நூல்: புஹாரி (7492)
மேலும் ரமளான் மாதத்தில் நம்மால் முடிந்த அளவு ஏதேனும் உணவைத் தயாரித்து ஏழை, எளியவருக்குக் கொடுப்போம். ஆனால் ரமளான் முடிந்து விட்டாலோ நம் அண்டை வீட்டார் உண்ண உணவில்லாமல் பசியோடு இருக்கிறார்கள் என்பதை அறிந்தால் கூட அவர்களுக்கு உணவளிக்க நமக்கு மனம் வருவதில்லையே! ஏன்? என்று நமக்கு நாமே கேட்டு, ரமளான் அல்லாத நாட்களிலும் பசித்தவருக்கு உணவளிக்க வேண்டும்.
நாம் எவ்வளவு வீண் வம்பு செய்பவர்களாக இருந்தாலும், ரமளான் வந்து விட்டால், நம்மிடம் யார் வம்புக்கு வந்தாலும் கூட, நான் நோன்பாளி என்று விலகிக் கொள்கிறோம். அதே போன்று ரமளான் முடிந்த பிறகும் செயல்பட நம்மை நாமே சீர்திருத்திக் கொள்ள வேண்டும்.
நோன்பு நோற்றிருக்கும் போது உங்களிடம் ஒருவர் சண்டைக்கு வந்தால் அறியாமையாக நடந்து கொண்டால், ஏசினால், ”நான் நோன்பாளி” எனக் கூறிவிடுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி (1894)
பொய்யான பேச்சு நடவடிக்கை
இன்று டி.வி. இல்லாத அறை இல்லை என்று சொல்லும் அளவுக்கு எல்லா வீடுகளிலும் டி.வி. உள்ளது. அதிகமான நேரத்தை நாம் அந்த டி.வி.யின் முன்னால் தான் செலவிடுகின்றோம். பள்ளியில் பாங்கு சொல்வது கூட தெரியாமல் சீரியலில் மூழ்கியிருக்கின்றோம்.
ஆனால் ரமளான் மாதத்தில் நம்மில் பலர் சினிமா, சீரியல் பார்ப்பதை விட்டு விடுகின்றோம். ஏனெனில் நோன்பின் போது பொய்யான காரியங்களில் ஈடுபட்டால் எந்தப் பலனும் இல்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
‘யார் பொய்யான பேச்சுக்களையும், பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடவில்லையோ அவர் தமது உணவையும், பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை.’
அறிவிப்பவர் : அபூஹுரைரா(ரலி)
நூல் : புஹாரி (1903)
இஃதிகாஃப்
நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருந்தார்கள். அவர்களுக்குப் பின் அவர்களின் மனைவியர் இஃதிகாஃப் இருந்தார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),
நூல் : புகாரி 2006
நேரம் போக்க விளையாட்டு
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், யார் நர்த் (காய் வைத்து ஆடும்) என்ற விளையாட்டை விளையாடுகிறோ அவர் தனது கையை பன்றியின் இறைச்சியிலும் பன்றியின் இரத்தத்திலும் பிணைந்து கொண்டதற்கு சமம்.
நூல் : முஸ்லிம்
ஆகவே அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டிய வழியில் ரமலானை அடைந்து அதனை (Welcome Ramadan) புன்னகையுடன் வரவேற்போம்…. Welcome Ramadan அதை முழுமை படுத்தி பாவ மன்னிப்பை பெறக்கூடிய பாக்கியத்தை நாம் அனைவரும் பெறுவோமாக.
அன்புடன்
முத்துப்பேட்டை அலீம்
முந்தைய பதிவை படிக்க Drugs Addiction போதையும் – இன்றைய இளைஞர் சமுதாயமும்